/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையில் விழுந்த மரங்கள் போக்குவரத்து பாதிப்பு
/
சாலையில் விழுந்த மரங்கள் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூன் 12, 2024 01:11 AM

கூடலுார்,:ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் விழுந்த மரங்களால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து, மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஊட்டி தேசிய நெடுஞ்சாலை, பைக்காரா வனத்துறை அலுவலகம் அருகே, மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், கூடலுார் கேரளா, கர்நாடகாவுக்கும், ஊட்டி இடையே வாகனங்கள் சாலையின் இரு புறமும் நிறுத்தப்பட்டது. பயணிகள் ஓட்டுனர்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.
தொடர்ந்து, ஓட்டுனர்கள், பயணிகள் இணைந்து மரத்தை சாலையோரம் தள்ளி, வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தினர். தொடர்ந்து, வாகனங்கள் இயக்கப்பட்டது.
* டி.ஆர்., பஜார் அருகே, காலையில் ராட்சத மரம் சாய்ந்து வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை துறையினர், பொக்லைன் இயந்திரம் மூலம் மரத்தை அகற்றி போக்குவரத்து சீரமைத்தனர்.
கூடலுார் மைசூர் தேசிய நெடுஞ்சாலை, தொரப்பள்ளி சங்கிலிக்கேட் அருகே காலை, 9:30 மணிக்கு சாலையோரம் மூங்கில் துார் சாய்ந்தது. இதனால், வாகனங்கள் அப்பகுதியை கடந்து செல்ல சிரமம் ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலை துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம், மூங்கில் தூரை அகற்றி போக்குவரத்து சீரமைத்தனர்.
ஓட்டுனர்கள் கூறுகையில்,'கூடலுாரில் பருவமழை துவங்க உள்ள நிலையில், சாலையில் அடிக்கடி மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கும் சூழல் உள்ளது. இதனை தடுக்க, ஆபத்தான மரங்களை கண்டறிந்து அகற்ற வேண்டும்,' என்றனர்.