/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேனீ வளர்க்க மானியம் தேவை விவசாயிகள் வலியுறுத்தல்
/
தேனீ வளர்க்க மானியம் தேவை விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : மார் 06, 2025 09:59 PM
உடுமலை, ; மகரந்த சேர்க்கையை அதிகரித்து, மகசூலுக்கு உதவும், தேனீக்களை வளர்க்க தேவையான பெட்டிகளை தோட்டக்கலைத்துறை மானியத்தில் வழங்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. தென்னந்தோப்புகளில் களைகளை கட்டுப்படுத்த, தொடர்ந்து களைக்கொல்லி தெளித்தல் உட்பட செயல்பாடுகளால், வளம் பாதித்து, மகசூல் குறைகிறது. மரங்களில் காய்ப்புத்திறன் குறைவுக்கு, மகரந்த சேர்க்கை பாதிப்பு முக்கிய பிரச்னையாக உள்ளது.
தென்னை மரங்கள் மற்றும் காய்கறி சாகுபடியில், மகரந்த சேர்க்கைக்கு உதவும், தேனீக்கள், இயல்பாக கூடு கட்டுவது, குறைந்து, முற்றிலுமாக மறைந்து வருகிறது. எனவே, தேனீக்களை பெட்டியில் வைத்து வளர்த்து, மகரந்த சேர்க்கையை அதிகரிக்கவும், கூடுதல் வருவாய் பெறவும் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆனால், தேனீ வளர்ப்பு பெட்டிகளின் விலை அதிகமாக இருப்பதுடன், அதற்கான தொழில்நுட்பங்களும் தெரியாமல் குழப்பமடைகின்றனர்.
முன்பு, தோட்டக்கலைத்துறை சார்பில், தேனீ வளர்ப்புக்கு ஊக்கமளிக்கப்பட்டு, பயிற்சிகளும், மானிய விலையில், பெட்டிகளும் வினியோகிக்கப்பட்டன. இந்த மானிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என, இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.