/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மழையின் போது ஏற்படும் வெள்ளப்பெருக்கு
/
மழையின் போது ஏற்படும் வெள்ளப்பெருக்கு
ADDED : ஆக 29, 2024 09:57 PM

கூடலுார் : கூடலுாரில் அவ்வப்போது பெய்யும் பலத்த மழையினால், ஆறுகளில் அடிக்கடி வெள்ளப் பெருக்கு ஏற்படுவதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
கூடலுார், நடுவட்டம், முதுமலை பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. நிலத்தடி நீரும் வெகுவாக உயர்ந்துள்ளது. சாலையில் மரங்கள் சாய்ந்து, மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
மேலும், ஆறுகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதனால், ஏற்படும் ஆபத்தை கருத்தில் கொண்டு, ஆற்றின் கரைக்கு சென்று குளிப்பது, மீன் பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதை மக்கள் தவிர்க்க வலியுறுத்தி உள்ளனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'கூடலுாரில் அனைத்து பகுதிகளிலும் ஒரே நேரத்தில் மழை பெய்வதில்லை. சில பகுதிகளில் பலத்த மழை பெய்யும்போது, மற்ற பகுதியில் மிதமான காலநிலை நிலவுவது வாடிக்கையாக உள்ளது.
இதனால், மழை பெய்யாத பகுதிகளில் உள்ள ஆறுகளிலும் திடீரென மழை வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது.
இதனால், ஆபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, மக்கள் தங்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஆறுகளில் இறங்குவதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.

