காலநிலை மாற்றம் காரணமாக உணவு பாதுகாப்பு கேள்விக்குறி
காலநிலை மாற்றம் காரணமாக உணவு பாதுகாப்பு கேள்விக்குறி
ADDED : ஜூலை 28, 2026 02:00 PM
கோத்தகிரி: ‘காலநிலை மாற்றம் மற்றும் மக்கள் பெருக்கம் காரணமாக, உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது,’ என, தெரிவிக்கப்பட்டது.
கோத்தகிரி கேர்பெட்டா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், அறிவியல் கருத்தரங்கு நடந்தது. பள்ளி ஆசிரியர் சரோஜா தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ, சிறப்பு கருத்தாளராக கலந்து கொண்டு பேசிசுகையில், ‘‘உலகில் காலநிலை மாற்றம், மக்கள் தொகை பெருக்கம் போன்ற காரணங்களால், உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் மட்டும் அல்லாமல், உலகம் முழுவதும் கோடி கணக்கில் முதலீடு செயது வருகின்றனர். வறட்சி நாட்களில் கால்நடைகள், ஏழை விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. இவற்றை காக்க வேண்டும். கடலில் மீன் பிடிப்பதை தொழிலாக கொண்டுள்ள கோடிக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழியும் ஆபத்து உள்ளது. இந்நிலையில், இதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது,’’ என்றார்.
நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் பங்கேற்றனர். முன்னதாக, ஆசிரியர் ராஜ்குமார் வரவேற்றார். ஆசிரியை யசோதா நன்றி கூறினார்.
