/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மூங்கில் காட்டில் பரவிய வனத்தீ: எரிந்த விடுதி அறை
/
மூங்கில் காட்டில் பரவிய வனத்தீ: எரிந்த விடுதி அறை
ADDED : ஏப் 08, 2024 11:44 PM

கூடலுார்:மசினகுடி அருகே ஏற்பட்ட வனத்தீயில், மூங்கில்கள் எரிந்து சாம்பலானதுடன், தனியார் தங்கும் விடுதியில் அறையும் எரிந்து பாதிக்கப்பட்டது.
முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வன கோட்டங்களில், கடந்த ஆண்டு எதிர்பார்த்த பருவமழை பெய்யவில்லை. தொடர்ந்து, நடப்பு ஆண்டு கோடைமழை ஏமாற்றி வருகிறது.
கடும் வறட்சி காரணமாக வனப்பகுதியில், தாவரங்கள் புறகள் காய்ந்து, மரங்கள் இலைகள் உதிர்ந்து பசுமை இழந்து உள்ளது. வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் ஏற்பட்ட, வறட்சியின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், மசினகுடி வனச்சரகம், ஆச்சக்கரை பகுதியில் நேற்று, மதியம் மூங்கில் காட்டில் வனத்தீ ஏற்பட்டது. அங்குள்ள வனவிலங்குகள் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்தன.
மசினகுடி வனச்சரகர் பாலாஜி மற்றும், 30க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
காற்றின் வேகம் தீ விரைவாக பரவியது. அப்போது, தனியார் விடுதியில் மரத்தில் கட்டப்பட்டுள்ள தங்கும் அறை தீயில் எரிந்து சேதமானது.
கூடலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் மார்ட்டின் மற்றும் தீயணைப்பு வீரர்கள், வனத்துறையுடன் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். வனத்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

