/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நடவு செய்த காபி நாற்றுகள் அகற்றிய வனத்துறையினர்
/
நடவு செய்த காபி நாற்றுகள் அகற்றிய வனத்துறையினர்
ADDED : ஜூலை 06, 2024 01:21 AM

கூடலுார்:கூடலுார் எல்லைமலை குரும்பர்பாடி பகுதியில், நடவு செய்த காபி நாற்றுகளை வனத்துறையினர் அகற்றியதாக, பழங்குடியினர் புகார் தெரிவித்தனர்.
கூடலுார், ஓவேலி எல்லைமலை அருகே உள்ள, குரும்பர்பாடி பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள், தங்கள் கைவசம் உள்ள இடத்தில், சில நாட்களுக்கு முன் காபி நாற்று நடவு செய்துள்ளனர். அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர், 'அந்த இடம் வனத்துறைக்கு சொந்தமானது,' எனக்கூறி, காபி நாற்றுளை அகற்றி உள்ளனர்.
அதிருப்தி அடைந்த பழங்குடி மக்கள் நேற்று, கூடலுார் ஆர்.டி.ஓ., செந்தில்குமாரை சந்தித்து, 'பல ஆண்டுகளாக தங்கள் கைவசம் உள்ள இடத்தில் நடவு செய்யப்பட்ட காபி செடிகளை அகற்றியது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என கூறினர்.
ஆர்.டி.ஓ., கூறுகையில், 'வருவாய் துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து, இடத்தின் வகை குறித்து முடிவு செய்யப்படும்,' என்றார்.
வனத்துறையினர் கூறுகையில், 'அப்பகுதி வனத்துறைக்கு சொந்தமான இடம். ஏற்கனவே பயிரிட்டு இருந்த பழைய விவசாய பயிர்களை ஏதும் அகற்றப்படவில்லை. புதிதாக நடவு செய்யப்பட்ட காபி நாற்றுகள் மட்டும் அகற்றப்பட்டது,' என்றனர்.