/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணி: சிரமப்படும் மக்கள்
/
பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணி: சிரமப்படும் மக்கள்
பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணி: சிரமப்படும் மக்கள்
பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணி: சிரமப்படும் மக்கள்
ADDED : மே 06, 2024 10:50 PM

பந்தலுார்;பந்தலுார் அருகே பாதியில் விடப்பட்ட சாலை சீரமைப்பு பணியால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
பந்தலுார் அருகே நெலக்கோட்டை ஊராட்சியில், வெள்ளேரி, நெல்லிப்புற, செவிடன் கொல்லி, அயனிபுறா உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. வெள்ளேரி பகுதியிலிருந்து இந்த இடங்களுக்கு செல்வதற்கு, கேரளா மாநில எல்லையை ஒட்டி மண் சாலை அமைந்துள்ளது.
இந்த சாலை மேட்டுப்பாங்கான சாலையாக உள்ளதால், மழை காலங்களில் இந்த பகுதிக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.
இதனால், 'நபார்டு' திட்டத்தின் கீழ் இந்த சாலையை சீரமைக்க கடந்த, 2022 ஆம் ஆண்டு அளவீடு செய்து, சாலை சீரமைக்க, 1 கோடியே 35 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இப்பகுதியில், அதிகளவில் பழங்குடியின மக்கள் மற்றும் இதர சமுதாய மக்கள் பயன்படுத்தும், இந்த சாலையை சீரமைப்பதற்கு பதில், சில வசதி படைத்த குடும்பத்தினர் பயன்படுத்தும் வேறு சாலையை சீரமைத்துள்ளனர்.
இது குறித்து, பழங்குடி மக்கள் மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுத்ததுடன், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை பெற்றனர்.
இதற்கு பின்பு நடந்த முயற்சியின் காரணமாக, ஏற்கனவே அளவீடு செய்த வெள்ளேரி- -நெல்லிபுறா சாலையில், சமதளமாக இருந்த வயல் பகுதி மட்டும் தார் சாலையாக மாற்றம் செய்யப்பட்டது. மீதமுள்ள மேடு பாங்கான சாலை சீரமைக்காமல் விடப்பட்டது.
இதனால், மேட்டுப்பங்கான சாலையில் செல்ல முடியாமல், இங்கு வரும் வாகனங்கள் திரும்பி செல்லும் அவலம் ஏற்பட்டு வருகிறது.
இந்த சாலை வழியாக, உள்ளூர் கிராம மக்கள் மட்டுமல்லாமல், நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் வனத்துறையினர், ஆய்வு பணி மற்றும் யானை விரட்டும் பணிக்கு நடந்து செல்லும் நிலை தொடர்கிறது.
இப்பகுதியை சேர்ந்த சதானந்தம் என்பவர் கூறுகையில், ''இங்கு ஏற்கனவே நிதி ஒதுக்கிய சாலையை தவிர்த்து, வேறு பகுதியில் சாலை சீரமைத்தது குறித்து இப்பகுதி பொதுமக்கள் சார்பில் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்படும். மேலும், இங்குள்ள மேடுபாங்கான சாலையை சீரமைக்க போராட்டம் தொடரும்,'' என்றார்.