அணைகளில் தண்ணீர் குறைவால் மின் உற்பத்தி பாதிப்பு!பருவ மழையை எதிர்பார்க்கும் மின் வாரியம்
அணைகளில் தண்ணீர் குறைவால் மின் உற்பத்தி பாதிப்பு!பருவ மழையை எதிர்பார்க்கும் மின் வாரியம்
UPDATED : ஜூலை 19, 2026 03:19 PM
ADDED : ஜூலை 19, 2026 12:20 PM

ஊட்டி: நீலகிரி அணைகளில் தண்ணீர் இருப்பு குறைந்து வரும் நிலையில், மின் உற்பத்தியில் திணறும் நிலை ஏற்பட்டிருப்பதால், இருப்பில் உள்ள தண்ணீர் ஒரு மாதம் தாக்குபிடிக்கலாம் என்பதால் மின் வாரியம் மழையை எதிர்பார்த்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் குந்தா, பைக்காரா நீர் மின் திட்டத்தின் கீழ், 12 மின் நிலையங்கள், 13 அணைகள் உள்ளன. தினசரி, 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளும் திறன் உள்ளது. நடப்பாண்டில், கோடை மழை சராசரி அளவு, 40 செ.மீ.,ல் 10 செ.மீ., பதிவாகியுள்ளது. தென் மேற்கு பருவமழை சராசரி அளவு, 65 செ.மீ., பருவ மழை துவங்கி ஒன்றரை மாதங்களில், 12 செ.மீ., பதிவாகியுள்ளது. 12 மின் நிலையங்களில் உள்ள, 32 பிரிவுகளில் தற்போது, தினசரி உற்பத்தி அதிகபட்சம், 200 மெகாவாட் அளவில் உள்ளது. கடந்தாண்டு ஜூலை மாதங்களில் மின் உற்பத்தி, 450 மெகாவாட்டாக இருந்தது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், 70 மெகாவாட் நீலகிரி பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் நிலையில், 80 சதவீதம் மின்சாரம் கோவை, ஈரோடு உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. மழை இல்லாத பட்சத்தில் வெளி மாவட்டங்களுக்கு மின்சாரம் வினியோகிப்பதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது.
வருண பகவான் கருணை காட்டணும்
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'நடப்பாண்டு கோடை மழை, தென் மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. கடந்த ஏப்., மாதம் நிலவரப்படி, 35 சதவீதம் தண்ணீர் இருப்பில் இருந்தது. அதன்பின், அவ்வப்போது, பெய்த மழைக்கு, 5 அடி வரை நீர் மட்டம் உயர்ந்தது. மின் உற்பத்திக்கு தொடர்ந்து தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருவதால் மழை தேவைப்படுகிறது. குறைந்தது, 60 சதவீதம் அளவுக்கு தண்ணீர் இருப்பில் இருந்தால் மட்டுமே தடையின்றி மின் உற்பத்தி மேற்கொள்ள முடிகிறது. தொடர்ந்து ஒரு மாதம் மழை பெய்தால் மட்டுமே நடப்பாண்டு மின் உற்பத்தியை சமாளிக்க முடிகிறது. மழையை எதிர்பார்த்துள்ளோம்.' என்றனர்.
