/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
/
பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ADDED : ஜூன் 26, 2024 10:09 PM

மேட்டுப்பாளையம் : பில்லூர் அணைக்கு, நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து, அணையில் இருந்து வினாடிக்கு, 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட்டனர். இதனால் பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோவை - நீலகிரி மாவட்ட எல்லையில், காரமடை வனப்பகுதியில் பில்லூர் அணை கட்டப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்ட உயரம் 100 அடியாகும். அணையின் பாதுகாப்பு நலன் கருதி, 97 அடிக்கு நீர்மட்டம் உயரும்போது, அணை நிரம்பியதாக அறிவித்து, அணைக்கு வருகின்ற தண்ணீர் முழுவதையும், அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடுவர்.
நேற்று முன்தினம் இரவு, அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில், கன மழை பெய்துள்ளது. இதில் அவலாஞ்சியில், 110 மில்லி மீட்டர், குந்தாவில், 22 மி. மீ., கெத்தையில், 8 மி. மீ., பரளியில், 5 மி. மீ., பில்லூரில், 4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதனால் அணைக்கு வினாடிக்கு, 1387 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம், நேற்று காலை, 92.75 அடியாக உயர்ந்தது. அணைக்கு நீர் வரத்து அதிகம் வந்து கொண்டிருப்பதால், விரைவில் அணை நிரம்ப வாய்ப்புள்ளது. அதனால் அதிகாரிகள் அணையிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய, வினாடிக்கு, 6 ஆயிரம் கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் திறந்து விட்டனர். இதனால் பவானி ஆற்றில் இரண்டு பக்கம் கரையை தொடும் அளவிற்கு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆற்றில் தண்ணீர் அதிகம் வந்து கொண்டிருப்பதால், கரையோரம் உள்ள பொதுமக்கள், பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படி, மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன் அறிவித்துள்ளார்.