/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காரமடை ரயில்வே மேம்பால பணிகள் தொய்வு
/
காரமடை ரயில்வே மேம்பால பணிகள் தொய்வு
ADDED : ஏப் 24, 2024 09:58 PM

மேட்டுப்பாளையம் : காரமடை-தோலம்பாளையம் சாலைக்கு இடையே, அமைக்கப்படும் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெறாமல் பாதியில் நின்றுள்ளன.
மேட்டுப்பாளையத்தில் இருந்து தோலம்பாளையம், வெள்ளியங்காடு, கோப்பனாரி, பில்லூர் அணை ஆகிய ஊர்களுக்கு, காரமடை நகரில் தோலம்பாளையம் ரயில்வே கேட் வழியாக செல்ல வேண்டும். ரயில்வே கேட் போடும்போது, வாகனங்கள் சாலையின் இரு பக்கம், அணிவகுத்து நிற்கின்றன. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக, 28 கோடி ரூபாய் செலவில் பைபாஸ் சாலை மற்றும் ரயில்வே மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. மேம்பாலம், பைபாஸ் சாலை ஆகிய பணிகள் துவங்கி, ஒன்றரை ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றரை கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படும், இந்த பைபாஸ் சாலையால், காரமடை நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு, ஓரளவு தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, தோலம்பாளையம், வெள்ளியங்காடு செல்லும் வாகனங்கள் அனைத்தும், இந்த பைபாஸ் சாலை மற்றும் ரயில்வே மேம்பாலம் வழியாக, தோலம்பாளையம் சாலையில் சென்றடையலாம். தோலம்பாளையம் சாலையில் இருந்து, திம்மம்பாளையம், ஏழுசுழி, மத்தம்பாளையம் வழியாக, கோவை சாலையை சென்றடைய ஏற்கனவே சாலை உள்ளது.
கோவையிலிருந்து மேட்டுப்பாளையம், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகிய ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள், இந்த பைபாஸ் சாலையை பயன்படுத்தலாம். இதற்காக 17 இடங்களில் தூண்கள் அமைத்து, அதன் மீது, 12 மீட்டர் அகலத்திற்கு சாலை போடப்பட உள்ளது. இந்த மேம்பாலம் காரமடை - - மேட்டுப்பாளையம் ரயில் பாதையை கடந்து செல்கிறது. அதனால், ரயில் பாதை அருகே, 7.5 மீட்டர் உயரத்துக்கு, மேம்பாலம் அமைக்கும் பணிகளை, ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. ஆரம்பத்தில் பணிகள் விரைவாக நடைபெற்றன.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக, பணிகள் ஏதும் நடைபெறாமல் அப்படியே நின்றுள்ளன. இதனால் பைபாஸ் சாலை மற்றும் ரயில்வே மேம்பாலம் கட்டும் திட்டப் பணிகள், குறிப்பிட்ட காலத்தில் செய்து முடிக்க முடியாத நிலை ஏற்படும்.
இதுகுறித்து காரமடை நகர பொதுமக்கள் கூறுகையில், 'ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளது. ரயில்வே அதிகாரிகள் உடனடியாக மேம்பாலம் கட்டும் பணியை துவக்க வேண்டும்'என்றனர்.

