/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலையில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா கோலாகலம்
/
மலையில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா கோலாகலம்
ADDED : ஆக 27, 2024 02:27 AM
ஊட்டி:நீலகிரி மாவட்டம் முழுவதும் கோவில்கள், இல்லங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த கோகுலாஷ்டமி தினம், கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. ஊட்டி சீனிவாச பெருமாள் கல்யாண மண்டபத்தில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, ஹரே கிருஷ்ணா மையம் சார்பாக, பகவானுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.
மஞ்சூர் சாம்ராஜ் கிருஷ்ணர் கோவிலில் காலை முதல் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடத்தப்பட்டன. கோவில் வளாகத்தில் உள்ள பிருந்தாவனத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதார காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியை ஒட்டி, காலை, 8:30 மணி முதல் மதியம், 2:00 மணி வரையிலும், மதியம்,3:00 மணி முதல் இரவு, 9:30 மணி வரையிலும் ஸ்ரீராதாகிருஷ்ண தரிசனம், ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பஜனை நிகழ்ச்சிகள் நடந்தது.
வீடுகளிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. வீட்டுக்குள் கிருஷ்ணன் நடந்து வருவதுபோல கோலமிட்டும், சீடை, முறுக்கு, அப்பம் உள்ளிட்ட பலகாரங்களோடு அவல், வெண்ணெய் உள்ளிட்டவற்றை வைத்தும் வழிபட்டனர்.
பந்தலுார்:
பந்தலுாரில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில், கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. ஐயப்பன் கோவிலில் ஐயப்பன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணருக்கு அர்ச்சகர் சந்திரன் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
தொடர்ந்து, கிருஷ்ணர், ராதை வேடமணிந்த குழந்தைகள், கோவிலுக்கு வரவழைக்கப்பட்டு, அங்கு கிருஷ்ணர் நாமம் பாடி அங்கிருந்து, செண்டை மேளத்துடன், வேடமணிந்த குழந்தைகள் மற்றும் பெற்றோர் ஊர்வலமாக வந்தனர்.
தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. கொட்டும் மழையிலும் கிருஷ்ணர், ராதை வேடமணிந்த குழந்தைகள், மகிழ்ச்சியுடன் நடந்து சென்றது அனைவரையும் கவர்ந்தது.
கூடலுார்:
கூடலுார் பாடந்துறை பகுதியில், பால கோகுலம் அமைப்பு சார்பில், கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் மூச்சுகுன்னு பகுதியில் காலை, 10:00 மணிக்கு துவங்கியது. கிருஷ்ணர், ராதை வேடமிட்ட குழந்தைகள் வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். ஊர்வலம், பாடந்துறை முத்துமாரியம்மன் கோவிலில் நிறைவுபெற்றது.
மசினகுடியில் மதியம், 3:00 மணிக்கு துர்க்கை அம்மன் கோவிலில் ஊர்வலம் துவங்கியது. அலங்கரிக்கப்பட்ட தேரில் கிருஷ்ணர் பகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, பூஜைகள் நடைபெற்றது. குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
* கூடலுார் தேவர்சோலை ஸ்ரீ சங்கரன் கோவிலில் மதியம், 3:30 மணிக்கு, 'ரோபோடிக்' யானை ஊர்வலத்துடன் கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் துவங்கியது. முருகன் கோவில் சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு பங்கேற்றனர்.
தொரப்பள்ளி ஸ்ரீ ராமர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு காலை முதல் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். கோழிப்பாலம், சாஸ்தாகிரி ஐயப்பன் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு, கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
புத்தூர்வயல் மகாவிஷ்ணு கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா காலை முதல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
குன்னுார்:
குன்னுாரில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில், ஐயப்பன் கோவிலில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் விளக்கு பூஜை இடம் பெற்றது . தொடர்ந்து கிருஷ்ணர் தேர்பவனி நடந்தது. கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்த குழந்தைகள் ஊர்வலமாக சென்று மீண்டும் ஐயப்பன் கோவிலை வந்தடைந்தனர். செண்டை மேளம் முழங்க நடந்த இந்த ஊர்வலத்தில் நாதஸ்வரம், வஜ்ரம் குழுவினரின் சிலம்பாட்டம், புலியாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்றது. அனைத்து குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கிருஷ்ணாபுரம் கோவிலில் கோபூஜை நடந்தது. ஏற்பாடுகளை விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் செய்திருந்தனர்.