/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முதுமலையில் இளம் யானைகளுக்கு கும்கி பயிற்சி
/
முதுமலையில் இளம் யானைகளுக்கு கும்கி பயிற்சி
ADDED : மே 16, 2024 06:12 AM

கூடலுார் : முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமில் வளர்ப்பு யானைகளுக்கு, 'கும்கி' பயிற்சி அளிக்கப்படுகிறது.
முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு மற்றும் அபயாரண்யம் யானைகள் முகாமில் இரண்டு குட்டி யானைகள் உட்பட, 29 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதில், ஆறு யானைகள் ஓய்வு பெற்றன.
இங்கு உள்ள பயிற்சி பெற்ற 'கும்கி' யானைகள், ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்டுவது, அவைகளை பிடித்து முதுமலைக்கு கொண்டு வருவது, இளம் வளர்ப்பு யானைக்கு 'கும்கி' பயிற்சி வழங்குவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், இங்குள்ள வளர்ப்பு யானைகள் கிருஷ்ணா, கிரி, பொம்மி, ரகு, ஜம்பு, மசினி ஆகியவைகளுக்கு சில வாரமாக, தினமும் காலையில், 'கும்கி' பயிற்சி அளித்து வருகின்றனர். இதனை, சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர்.வனத்துறையினர் கூறுகையில், 'முகாமில் சீனியர் 'கும்கி' யானைகள் ஓய்வு பெறும் போது அதற்கு மாற்றான கும்கி யானைகளின் தேவை உள்ளது. அதனை கருத்தில் கொண்டு, இளம் வளர்ப்பு யானைகளுக்கு 'கும்கி' பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பருவமழை துவங்கும் வரை பயிற்சி நடக்கும். முழுமையாக பயிற்சி பெற்ற யானைகள், சீனியர் கும்கி யானைகளுடன் இணைந்து ஊருக்குள் வரும் யானைகளை விரட்டுதல்; அதனை பிடித்து லாரியில் ஏற்றி வனப்பகுதிகள் விடுதல் அல்லது முகாமுக்கு கொண்டு செல்லுதல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படும்,' என்றனர்.