2026ல் அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்து தொடங்கும்; அடித்துச் சொல்கிறார் முதல்வர்
2026ல் அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்து தொடங்கும்; அடித்துச் சொல்கிறார் முதல்வர்
UPDATED : ஆக 11, 2025 04:15 PM
ADDED : ஆக 11, 2025 11:14 AM

உடுமலைப்பேட்டை: '2026ல் அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்து தொடங்கும்; தன்னை எம்ஜிஆர், ஜெயலலிதாவைப் போல நினைத்துக் கொணடு இபிஎஸ் சவுண்டு விடுகிறார்,' என்று திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் ரூ.40 கோடியில் கட்டப்பட்ட டைடல் பார்க்கை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், ரூ.182 கோடி மதிப்பிலான 35 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் முதல்வர் பேசியதாவது; அனைத்து துறைகளின் கோட்டை தான் உடுமலைப்பேட்டை. தியாகிகளின் திருவுருவமான திருப்பூர் குமரன் தோன்றிய மாவட்டம் திருப்பூர். சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு எல்லாம் சர்க்கரையை அள்ளி தரும் இனிப்பான ஊர் இது.
கருணாநிதியால் உருவாக்கப்பட்ட இந்த திருப்பூர் மாவட்டத்திற்கு, கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில் ரூ.588 கோடி 6,266 சாலை பணிகள், 133 திருக்கோவில்களுக்கு கும்பாபிஷேகம், 328 கோவில்களில் 804 சீரமைப்பு பணிகள், 5 சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் என பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. காங்கேயம் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட உள்ளது. இதுபோன்று ரூ.10,491 கோடி மதிப்பிலான வளர்ச்சிப்பணிகள், நலத்திட்ட உதவிகள் திருப்பூருக்கு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் திருப்பூர் எந்த அளவுக்கு புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டை சொல்லலாம். 2006-11 வரையிலான திமுக ஆட்சியில், திருப்பூர் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 3 ரயில்வே பாலங்கள் உள்பட 5 பாலங்களை கட்ட அப்போதைய முதல்வர் கருணாநிதி ஆணையிட்டார். ஆனால், 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த போது, இந்தப் பணிகளை முடக்கி விட்டார்கள். 2021ல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும், அந்தப் பணிகளை நாம் செய்து கொண்டு வருகிறோம்.
7 அறிவிப்புகள்
பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத்திட்டத்தின் அடுத்தகட்டமான நீராறு, நல்லாறு, ஆனைமலையாறு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.
பரம்பிக்குளம் பாசனப் பகுதிகளில் பல வாய்க்கால்கள் தூர்வாருவதற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
திருப்பூரில் மாணவர்கள், இளைஞர்கள் பயனடையும் வகையில், ரூ.9 கோடி செலவில் நவீன வசதிகளுடன் கூடிய மாவட்ட மைய நூலக கட்டடம்
திருப்பூர் மாநகராட்சி அமர்ஜோதி கார்டன் பகுதியில் ரூ.5 கோடி செலவில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம்
காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்தில் குடிநீர் வழங்கலை மேம்படுத்த ரூ.11 கோடியில் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
தாராபுரம் பகுதியில் உள்ள விவசாயிகள் பயனடையும் வகையில், ரூ.7.60 கோடி மதிப்பில் உப்பாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும்.
ஊத்துக்குளியில் ரூ.6.50 கோடியில் வெண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலை
உடுமலைப்பேட்டையில் தாஜ் தியேட்டருக்கு அருகே உள்ள சாலைக்கு முன்னாள் அமைச்சர் சாதிக் பாட்சாவின் பெயர் சூட்டப்படும்
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் செயல்படுவது குறித்து வல்லுநர் குழு அமைத்து ஆய்வு செய்யப்படும்
தோல்வி ஆரம்பம்
இபிஎஸ் இங்கு வந்தால் மட்டும் தன்னை மேற்கு மண்டலத்துக்காரர் என்று கூறி கொள்வார். ஆனால், அவரது ஆட்சியில் செய்ததை விட மேற்கு மண்டலத்திற்கு திமுக ஆட்சியில் தான் நிறைய திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன. இபிஎஸ் எந்த தைரியத்தில் திருப்பூரில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார் என்று தெரியவில்லை. ஆனால், 2026 தேர்தலில் அதிமுகவின் தோல்வி இங்கிருந்து தான் தொடங்கப் போகிறது.
ஏற்கனவே, 2024 தேர்தல், உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல் என இந்த மண்டலத்தில் தான் தோல்வியை சந்தித்து விட்டார். சுந்தரா டிராவல்ஸ் பஸ்ஸில் ஏறி ஊர் ஊராகச் சென்று பொய்களை கத்தி உரக்கப் பேசினால், தனது அலங்கோல ஆட்சியை மக்கள் மறந்துவிட்டு, இவர் பேச்சை மக்கள் நம்புவார்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார். ஆனால், அதில் மண் விழுவதைப் போல, உங்களுடன் ஸ்டாலின் பெரிய ஹிட்டாகி விட்டது.
விரக்தியின் உச்சம்
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை எதிர்த்து வழக்கு போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்தை கண்டித்த நீதிமன்றம், ரூ.10 லட்சம் நன்கொடையை அரசுக்கு கொடுக்குமாறு உத்தரவிட்டது. இது அவமானமா இல்லையா? பொருளாதார வளர்ச்சியில் சிறந்த மாநிலம் தமிழகம் தான் என்று அவங்க கூட்டணியில் இருக்கும் பாஜ அரசே அறிக்கை கொடுத்திருக்கிறது. இப்படி தொடர்ந்து இபிஎஸ்க்கு அடிமேல் அடி விழுகிறது. விரக்தியின் உச்சத்திற்கே சென்று விட்டார்.
அதனால் தான் முதல்வர் என்ற மக்கள் அளித்த பொறுப்புக்கு கூட மரியாதை கொடுக்காமல், தரம் தாழ்ந்து ஒருமையில் பேசி வருகிறார். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. என் பணி மக்கள் பணி. உங்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.
ஏதோ, தன்னை எம்ஜிஆர், ஜெயலலிதாவைப் போல நினைத்து விட்டு சவுண்டு விடுகிறார். அவரோடு, எந்த சதித்திட்டமும் நம்முடைய அரசின் சாதனைகளுக்கு முன்பு எடுபடாது. இந்த நல்லாட்சி தொடர வேண்டும் என்று தான் மக்களாகிய நீங்கள் விரும்புகிறீர்கள், இவ்வாறு அவர் கூறினார்.