/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இத்தலாரில் மண் சரிவு: 25 குடும்பங்கள் வெளியேற்றம் சுற்றுலா துறை அமைச்சரை முற்றுகையிட்டதால் பரபரப்பு
/
இத்தலாரில் மண் சரிவு: 25 குடும்பங்கள் வெளியேற்றம் சுற்றுலா துறை அமைச்சரை முற்றுகையிட்டதால் பரபரப்பு
இத்தலாரில் மண் சரிவு: 25 குடும்பங்கள் வெளியேற்றம் சுற்றுலா துறை அமைச்சரை முற்றுகையிட்டதால் பரபரப்பு
இத்தலாரில் மண் சரிவு: 25 குடும்பங்கள் வெளியேற்றம் சுற்றுலா துறை அமைச்சரை முற்றுகையிட்டதால் பரபரப்பு
ADDED : ஜூலை 18, 2024 10:55 PM

ஊட்டி,:ஊட்டி அருகே மண் சரிவு ஏற்பட்ட இத்தலார் கிராமத்திற்கு சென்ற சுற்றுலா துறை அமைச்சர், அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக குந்தா, ஊட்டி, அவலாஞ்சி, கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. கடும் குளிருடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊட்டி அருகே இத்தலார் கிராமத்தில், சூறாவளி காற்றுடன் பெய்த கன மழைக்கு, குடியிருப்பு நடுவே, 40 அடி உயரம், 100 அடி அகலத்திற்கு மண் சரிவு ஏற்பட்டது. மண் சரிவு ஏற்பட்ட கீழ் பகுதியில் இருந்த, 15 குடியிருப்புகள் மீது மண் சரிந்தது. மேல்புறத்தில் உள்ள, 10 வீடுகள் அந்தரத்தில் தொங்கி காணப்படுகிறது.
ஆய்வு செய்த வருவாய் துறையினர் அங்கு குடியிருந்த, 25 குடும்பங்களை நிவாரண முகாம்களில் தங்க சொல்லி அறிவுறுத்தினர். ஆனால், முகாம்களை தவிர்த்த கிராம மக்கள் உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்தனர்.
முற்றுகையில் சிக்கிய அமைச்சர்
இந்நிலையில், நேற்று மண் சரிவு ஏற்பட்ட பகுதியை சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன், கூடுதல் கலெக்டர் கவுசிக், ஆர்.டி.ஓ., மகாராஜ், குந்தா தாசில்தார் கலை செல்வி, மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். அங்கு வந்த பொதுமக்கள் அமைச்சர், அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.
அவர்கள் கூறுகையில், 'கடந்த, 2019 ம் ஆண்டில் இதே பகுதியில் பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டது. இங்கு தடுப்பு சுவர் அமைக்க ஊராட்சி ஒன்றிய நிதியிலிருந்து, 1.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதாக அனைவரும் கூறினர். ஆனால், எவ்வித பணிகளும் நடக்கவில்லை. அப்போதே பணிகள் மேற்கொண்டிருந்தால் இது போன்ற சம்பவங்களை தடுத்திருக்கலாம்,' என, தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை அமைச்சரும், அதிகாரிகளும் சமாதானப்படுத்தினர்.
சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில்,'' பருவ மழை ஓய்ந்ததும் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில், உடனடியாக தடுப்புசுவர் அமைத்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் மழை பாதிப்பு பகுதிகளில் பேரிடர் தடுப்பு நடவடிக்கை விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆபத்தான பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக நிவாரண முகாம்களுக்கு வர வேண்டும். அங்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன,'' என்றார்.