ADDED : ஏப் 16, 2024 12:44 AM

பாலக்காடு:பாலக்காடு அருகே, நெல்லியாம்பதியில், குடியிருப்பு பகுதி அருகே சிறுத்தை இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், நெம்மாரா அருகே நெலியாம்பதி வனப்பகுதியில், கூனம்பாலம் தேயிலை தோட்டம் உள்ளது. இத்தோட்டத்தின் அருகே உள்ள சாலையில் சிறுத்தை இறந்து கிடப்பதை அப்பகுதி மக்கள் நேற்று காலை கண்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெல்லியாம்பதி சரக வனத்துறையினர், 4 வயது மதிக்கத்தக்க சிறுத்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'இரவு நேரத்தில், இவ்வழியாக வந்த வாகனம் மோதி சிறுத்தை இறந்து இருக்கலாம் என கருதுகிறோம். இப்பகுதியில் கடந்து சென்ற வாகனங்களில் தகவல்கள் சேகரிக்கப்படுகிறது. பிரேத பரிசோதனைக்கு பிறகே, சிறுத்தை இறப்புக்கான காரணம் தெரியவரும்,' என்றனர்.

