/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிறுத்தை நடமாட்டம்: கண்காணிப்பில் வனத்துறை
/
சிறுத்தை நடமாட்டம்: கண்காணிப்பில் வனத்துறை
ADDED : ஏப் 24, 2024 09:50 PM

பந்தலுார் : பந்தலுார் அருகே தொழிற்பயிற்சி மைய வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
பந்தலுார் அருகே, உட்பட்டியில் இருந்து புஞ்சைவயல் வழியாக, கொளப்பள்ளி செல்லும் சாலை அமைந்துள்ளது. இங்கு புஞ்சைவயல் என்ற இடத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அரசு தொழிற் பயிற்சி மையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், விவசாய விளைபொருட்கள் பதப்படுத்தும் கூடம் ஆகியவை அமைந்துள்ளன.
இந்த அரசு கட்டடங்களுக்கு மத்தியில் புதர் பகுதி உள்ளது. நேற்று காலை சாலையின் கீழ் பகுதி புதரில் இருந்து, அரசு கட்டடங்கள் உள்ள பகுதிக்கு சிறுத்தை ஒன்று செல்வதை மக்கள் பார்த்துள்ளனர்.
இதுகுறித்து, பிதர்காடு வனச்சரகர் ரவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வனக்காவலர் காந்தி தலைமையிலான வன குழுவினர், புதர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனர். ஆனால், சிறுத்தை பதுங்கிய இடம் குறித்து தெரியவில்லை. எனினும் இந்த பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் சுகாதார நிலையத்திற்கு செல்லும் நபர்கள் மற்றும் இந்த சாலையில் நடந்து செல்வோர், தனியாக நடந்து செல்வதை தவிர்க்கவேண்டும்,' என்றனர்.

