/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோடை சீசனில் இ-பாஸ் முறை அமல்படுத்த உத்தரவு உள்ளூர் மக்கள்; சுற்றுலா பயணி கருத்து
/
கோடை சீசனில் இ-பாஸ் முறை அமல்படுத்த உத்தரவு உள்ளூர் மக்கள்; சுற்றுலா பயணி கருத்து
கோடை சீசனில் இ-பாஸ் முறை அமல்படுத்த உத்தரவு உள்ளூர் மக்கள்; சுற்றுலா பயணி கருத்து
கோடை சீசனில் இ-பாஸ் முறை அமல்படுத்த உத்தரவு உள்ளூர் மக்கள்; சுற்றுலா பயணி கருத்து
ADDED : மே 01, 2024 12:39 AM

குன்னுார்;ஊட்டி, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு, வரும் 7ம் தேதியில் இருந்து, ஜூன், 30 ம் தேதி வரை இ--பாஸ் எடுக்கும் நடைமுறையை அமல்படுத்த ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், உள்ளூர் மக்களுக்கு விலக்கு அளிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
நெரிசல் குறையும்
இது குறித்து, தன்னார்வலர் ரமேஷ் கூறுகையில்,''கோடை சீசனின் போது, கட்டுக்கடங்காமல் வரும் சுற்றுலா வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், போலீசாரும் பொது மக்களும் பாதிக்கப்படுகின்றனர். ஐகோர்ட் உத்தரவால், குறிப்பிட்ட அளவு வாகனங்கள் வருவதால் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
அதேவேளையில், சோதனை சாவடிகளில் உள்ளூர் மக்கள் எந்த சிரமமும் இல்லாத வகையில் வந்து செல்லும் வகையில், கூடுதல் பணியாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும். மேலும், அப்பகுதிகளில் நடக்கும் முறைகேடுகள் தவிர்க்க, உள்ளூர் வாகனங்களுக்கு 'பாஸ்' வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,''என்றார்.
குடிநீர் பிரச்னையை சமாளிக்கலாம்
சூழலியல் ஆர்வலர் கல்கி கூறுகையில், ''நீலகிரியில் தற்போது வெப்பம் அதிகரித்த நிலையில், இங்குள்ள அணைகளும் வறண்டு குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதில், பல லட்சம் சுற்றுலா பயணிகள் வரும் போது குடிநீர் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த சூழ்நிலையில், இ--பாஸ் அமல்படுத்துவதால் குடிநீர் பிரச்னையை ஓரளவு சமாளிக்க முடியும்.
விதிமீறிய காட்டேஜ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தவிர்க்கப்படும்,'' என்றார்.
கூட்டம் குறைந்தால் நல்லது
தஞ்சாவூர் சுற்றுலா பயணி இன்பராணி கூறுகையில்,'' கூட்டம் அதிகரித்து வருவதால், ஊட்டியில் தங்கும் விடுதி கிடைக்க சிரமமாக உள்ளது. ஒரு சுற்றுலா மையத்தில் இருந்து மற்றொரு சுற்றுலா மையத்துக்கு செல்லும்போது மூன்று மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டது. தரமான உணவு, கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் போதுமானதாக இல்லை.
''இ-பாஸ் நடைமுறைப்படுத்தினால், குறிப்பிட்ட அளவில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கும். சுற்றுலா மையங்களில் கூட்ட நெரிசல் இல்லாமல் இயற்கை காட்சிகளையும் பசுமையான சூழலையும் கொண்டாட முடியும். உள்ளூர் வியாபாரிகளுக்கும் நல்ல விற்பனை இருக்கும்,'' என்றார்.