/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பசுமையாக காணப்படும் கேரட் தோட்டங்கள்
/
பசுமையாக காணப்படும் கேரட் தோட்டங்கள்
ADDED : ஆக 02, 2024 05:34 AM

கோத்தகிரி : கோத்தகிரி பகுதியில் தொடர் மழை காரணமாக, கேரட் தோட்டங்கள் பசுமையாக காணப்படுகின்றன.
நீலகிரி மாவட்டத்தில், தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. நீர் ஆதாரமுள்ள விளை நிலங்கள், மலைக் காய்கறி சாகுபடிக்கு செய்யப்படுகிறது. அதில், பனிப்பொழிவிலும் பாதிக்காத கேரட் சாகுபடி, ஆண்டுதோறும் அதிக பரப்பளவில் மேற்கொள்ளப்படுகிறது.
நடப்பாண்டு, போதிய மழை பெய்துவரும் நிலையில், கோத்தகிரி பகுதியில், நெடுகுளா, ஈளாடா மற்றும் கூக்கல்தொறை உள்ளிட்ட பகுதிகளில், அதிக பரப்பளவில் கேரட் பயிரிடப்பட்டுள்ளது.
விதை, உரம் உட்பட, இடுபொருட்களின் விலை மற்றும் கூலி உயர்வு அதிகமாக இருந்தாலும், கூடுமானவரை கடன் பெற்று, விவசாயிகள் கேரட் பயிரிட்டு பராமரித்து வருகின்றனர்.
அறுவடை செய்யப்படும் கேரட்டுக்கு, போதிய விலை கிடைத்தால் மட்டுமே, விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். இல்லாத பட்சத்தில், இழப்பு தான் மிஞ்சும்.
இந்நிலையில், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், தொடர்ந்து மழை பெய்து வருவதால், கேரட் தோட்டங்கள் பசுமைக்கு திரும்பி வருகிறது. இனிவரும் நாட்களில், அறுவடை செய்யப்படும் கேரட்டிற்கு, கட்டுப்படியான விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், விவசாயிகள் பராமரித்து வருகின்றனர்.