/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி ஏரியில் சாகச விளையாட்டு பணிகள் அதிரடியாக நிறுத்திய தேசிய பசுமை தீப்பாயம்
/
ஊட்டி ஏரியில் சாகச விளையாட்டு பணிகள் அதிரடியாக நிறுத்திய தேசிய பசுமை தீப்பாயம்
ஊட்டி ஏரியில் சாகச விளையாட்டு பணிகள் அதிரடியாக நிறுத்திய தேசிய பசுமை தீப்பாயம்
ஊட்டி ஏரியில் சாகச விளையாட்டு பணிகள் அதிரடியாக நிறுத்திய தேசிய பசுமை தீப்பாயம்
ADDED : ஜூலை 04, 2024 02:09 AM

ஊட்டி:ஊட்டி படகு இல்ல ஏரியில், 'மாஸ்டர் பிளான்' சட்டத்தை மதிக்காமல் சுற்றுலா துறை சார்பில் நடந்த சாகச விளையாட்டு பணிகளை, தேசிய பசுமை தீர்ப்பாயம் நிறுத்த உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், ஊட்டி படகு இல்லம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இங்கு, அதிக அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நோக்கில் பல வகையான சாகச விளையாட்டுகளை அறிமுகப்படுத்த, மாநில சுற்றுலா துறை நடவடிக்கை எடுத்து, 5.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
அதில், படகு இல்ல ஏரியில், 'இழைவரிக் கோடு, மாபெரும் ஊஞ்சல், ரோலர் கோஸ்டர், பங்கீ ஜம்பிங், தொங்கு பாலம்,' உட்பட பல்வேறு அம்சங்களுக்கான கட்டுமான பணிகள் நடந்து வந்தது.
மாஸ்டர் சட்டம் மீறல்
ஏரியை ஒட்டி, மாநில அரசின் 'மாஸ்டர் பிளான்' சட்டத்தை மீறி, எவ்வித அனுமதியும் பெறாமல் பணிகள் நடந்து வருவதாக, நீலகிரி சுற்றுச்சூழல் சங்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தினர். இது குறித்து, மத்திய, மாநில அரசுகளுக்கு புகார் மனு அனுப்பினர்.
இதன் அடிப்படையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன் வந்து அனுமதி இல்லாமல் நடக்கும் இந்த பணிகள் குறித்து விளக்கம் அளிக்க, நீலகிரி மாவட்ட நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியது. இதை தொடர்ந்து, படகு இல்லத்தில் நடந்து வந்த பணிகள் நிறுவப்பட்டுள்ளன.
மதிப்பில்லை
நீலகிரி சுற்றுச்சூழல் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருண் பெள்ளி கூறுகையில்,'' மலை பகுதியின் சுற்றுச்சூழலை காக்க, மாநில அரசு கொண்டு வந்த 'மாஸ்டர் பிளான்' சட்டத்தின் படி, ஊட்டி தாவரவியல் பூங்கா; படகு இல்ல ஏரியை சுற்றி, 100 மீட்டர் சுற்றளவுக்கு எவ்வித கட்டுமானங்களும் கட்ட கூடாது.
இந்நிலையில், அரசின் சட்டத்தை, அரசு துறையே மீறி, எவ்வித அனுமதியும் பெறாமல், தனியார் அமைப்புடன் கைகோர்த்து, படகு இல்ல ஏரியில் பல கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
ஆனால், சாதாரண மக்கள் கட்டட பணியில் சிறிய விதிமீறலில் ஈடுபட்டால் கூட, 'சீல்' வைக்கும் மாவட்ட நிர்வாகம், நகராட்சி அதிகாரிகள் இந்த விஷயத்தில் அமைதியாக இருந்ததன் காரணம் புரியவில்லை.
தலையீடு
எங்கள் போராட்டத்துக்கு பின்பு, தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து, இந்த பணியை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏரியை ஒட்டி, 10 மீட்டர் இடைவெளி கூட இல்லாமல் நடக்கும் இந்த பணியை நிறுத்த வேண்டும். தனியாருக்கு ஆதரவாக போடப்பட்ட இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் மீண்டும் இந்த பிரச்னைக்காக கோர்ட் செல்ல உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறுகையில், '' படகு இல்லத்தில் நடந்து வந்த சாகச விளையாட்டுகளை அறிமுகப்படுத்தும் கட்டுமான பணி குறித்து சில ஆவணங்களை அளிக்க, தேசிய பசுமை தீர்ப்பாயம் கோரியதால் பணிகளை நிறுத்தி, அதற்கான ஆவணங்களை அளித்துள்ளோம்.
இதன் பின், மலை மேலிட எழில் நோக்கு குழுமத்திடம் முறையாக அனுமதி வாங்கிய பின் கட்டுமான பணிகள் மீண்டும் துவக்கப்படும்,'' என்றார்.
இதன் மூலம், அரசு துறை, மலை மேலிட எழில் நோக்கு குழுமத்திடம் எவ்வித அனுமதியும் பெறாமல், மாநில அரசின் சட்டத்தை மீறியுள்ளது வெட்டவெளிச்சமாகி உள்ளது.