/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலம்பூரில் புதிய போலீஸ் ஸ்டேஷன்; பணிகள் முடக்கம்
/
நீலம்பூரில் புதிய போலீஸ் ஸ்டேஷன்; பணிகள் முடக்கம்
ADDED : மே 29, 2024 11:25 PM
சூலுார் : சூலுார் போலீஸ் ஸ்டேஷன் எல்லையை இரண்டாக பிரித்து, நீலம்பூரில் புதிய போலீஸ் ஸ்டேஷன் துவக்கும் முடிவு கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது.
கருமத்தம்பட்டி உட்கோட்டத்துக்கு உட்பட்டது சூலுார் போலீஸ் ஸ்டேஷன். சூலுார், கண்ணம்பாளையம், பள்ளபாளையம் பேரூராட்சிகளும், 10 க்கும் மேற்பட்ட தாய் கிராமங்கள், 30 க்கும் மேற்பட்ட குக்கிராமங்களும் இதன் கட்டுப்பாட்டில் உள்ளன. 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். மேலும், சூலுார் போலீஸ் ஸ்டேஷனின் கீழ், சுல்தான்பேட்டை மற்றும் செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷன்கள் வருகின்றன. சுமார் 4 லட்சம் மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள மூன்று ஸ்டேஷன்களுக்கும் சேர்த்து, சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்கும் குற்ற பிரிவுக்கும் சேர்த்து ஒரு சர்க்கிள் இன்ஸ்பெக்டர், ஆறு எஸ்.ஐ.க்கள் மட்டுமே உள்ளனர். எஸ்.எஸ்.ஐ., க்கள் மற்றும் போலீசார் தேவைக்கும் குறைவாகவே உள்ளனர்.
பரந்த நிலப்பரப்பு, அதிக மக்கள் தொகை உள்ள இப்பகுதியில் நடக்கும் விபத்துகள், குற்ற சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை தடுக்கவும், குறைக்கவும் கூடுதலாக போலீஸ் ஸ்டேஷன் துவக்கி, போலீசாரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளன. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பாக, சூலுார் போலீஸ் ஸ்டேஷன் எல்லையை இரண்டாக பிரித்து , நீலம்பூரில் புதிய போலீஸ் ஸ்டேஷன் உருவாக்க திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், அதில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் கிணற்றில் போட்ட கல்லாகவே உள்ளது.
இதனால், போலீசாரின் வேலைப்பளு நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே தவிர, குறைந்தபாடில்லை. குற்ற சம்பவங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதனால், நீலம்பூரில் புதிய போலீஸ் ஸ்டேஷன் துவக்க வேண்டியது அவசர அவசியமாக உள்ளது.