/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கேரளத்தில் ஓணம் விழாக்கள் ரத்து: நேந்திரன் வாழை விலை சரிவு
/
கேரளத்தில் ஓணம் விழாக்கள் ரத்து: நேந்திரன் வாழை விலை சரிவு
கேரளத்தில் ஓணம் விழாக்கள் ரத்து: நேந்திரன் வாழை விலை சரிவு
கேரளத்தில் ஓணம் விழாக்கள் ரத்து: நேந்திரன் வாழை விலை சரிவு
ADDED : ஆக 27, 2024 01:29 AM

மேட்டுப்பாளையம்;கேரளத்தில் ஓணம் திருவிழாவை, கேரள அரசு ரத்து செய்துள்ளதை அடுத்து, நேந்திரன் வாழை, கிலோவுக்கு,12 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் அருகே, அன்னூர் சாலையில் தென்திருப்பதி நால் ரோட்டில், தனியார் வாழைத்தார் ஏல மையம் செயல்படுகிறது. இந்த மையத்தில் நேந்திரன் ஒரு கிலோவிற்கு எதிர்பார்த்த விலையை விட, 12 ரூபாய் வரை விலை குறைந்து விற்பனையானது. இது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வாழைத்தார் ஏல மைய நிர்வாகிகள் வெள்ளிங்கிரி, சின்னராஜ் ஆகியோர் கூறியதாவது: மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னூர், புளியம்பட்டி, பவானிசாகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், ஓணம் திருவிழாவிற்கு அறுவடை செய்து விற்பனை செய்யும் வகையில், நேந்திரன் வாழையை பயிர் செய்வர். கேரளாவில் ஓணம் திருவிழா நடைபெறுவதற்கு, 20 நாட்களுக்கு முன்னதாகவே நேந்திரன் சிப்ஸ் மக்கள் அதிகம் வாங்குவதால், நேந்திரன் வாழைத்தாருக்கு நல்ல விலை கிடைக்கும்.
இந்த ஆண்டு கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, கேரளா அரசு ஓணம் திருவிழாக்கள் நடத்துவதை ரத்து செய்துள்ளது. இதனால் கடைகளில் வியாபாரமும் நடைபெறுவது குறைந்துள்ளதாக கேரள வியாபாரிகள் கூறியுள்ளனர். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒரு கிலோ நேந்திரன் குறைந்தபட்சம், 20 ரூபாய்க்கும், அதிகப்பட்சம், 40 ரூபாய்க்கு மட்டுமே ஏலம் போனது. கடந்த வாரத்தை விட, இந்த வாரம் ஒரு கிலோவிற்கு, 12 ரூபாய் குறைந்துள்ளது.
அதேபோன்று கதளி வாழையும், ஒரு கிலோ குறைந்தபட்சம் 20 ரூபாய்க்கும், அதிகபட்ச, 40 ரூபாய்க்கு ஏலம் போனது. பூவன் ஒரு வாழைத்தார் குறைந்தபட்சம், 200க்கும், அதிகபட்சம், 600 ரூபாய்க்கும், ரஸ்தாளி, 250ல் இருந்து 650 ரூபாய்க்கும், ரோபஸ்டா, 150 லிருந்து, 450 க்கும், தேன் வாழை, 200ல் இருந்து, 700 ரூபாய்க்கும், செவ்வாழை குறைந்தபட்சம், 250க்கும், அதிகபட்சம் ஆயிரம் ரூபாய்க்கும், மொந்தன், 150 லிருந்து, 400 ரூபாய்க்கும், பச்சைநாடன், 200 ரூபாயில் இருந்து, 500 ரூபாய்க்கும் ஏலம் போனது.
வாழைத்தார்களின் விலையும், ஒரு தாருக்கு, 50 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. இவ்வாறு வாழைத்தார் ஏலம் மண்டி நிர்வாகிகள் கூறினர்.