/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆமைகுளம் அருகே யானை தாக்கி ஒருவர் காயம்
/
ஆமைகுளம் அருகே யானை தாக்கி ஒருவர் காயம்
ADDED : மே 16, 2024 05:22 AM
கூடலுார், : கூடலுார் ஆமைக்குளம் அருகே, காட்டு யானை தாக்கி ஒருவர் காயமடைந்தார்.
கூடலுார் கோழிக்கோடு சாலை ஆமைக்குளம் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன், 50. இவர் நேற்று முன்தினம் இரவு, உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, நண்பர்கள் மூன்று பேருடன் இரவு, 11:00 மணிக்கு, ஆமைக்குளம் நிழல் குடையை கடந்து, சிமென்ட் சாலையில் வீடு நோக்கி சென்றனர்.
அப்போது, திடீரென எதிரே காட்டு யானை வருவதை பார்த்து, நான்கு பேரும் தப்பி ஓடினர். அதில், மூவர் தப்பி விட, தியாகராஜன் யானையிடம் சிக்கி கொண்டார். யானை அவரை தாக்கியது. உடன் சென்றவர்கள் சப்தமிட்டு யானையை விரட்டி அவரை மீட்டுனர்.
தகவல் அறிந்த நாடுகாணி வனச்சரகர் வீரமணி மற்றும் வன ஊழியர்கள், தியாகராஜனை சிகிச்சைக்காக, கூடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின், மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கொண்டு சென்றனர்.
மக்கள் கூறுகையில், 'இந்த யானை கடந்த சில நாட்களாக இரவில் இப்பகுதியில் முகாமிட்டு மக்களை அச்சுறுத்தி, வருகிறது. தற்போது ஒருவரை தாக்கியுள்ளது.
இதனால், பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, யானை இப்பகுதிக்குள் நுழைவதை தடுக்க வேண்டும்,' என்றனர்.
இந்நிலையில், யானை அப்பகுதிக்குள் நுழைவதை தடுக்க, வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.