ADDED : ஜூலை 09, 2026 06:44 PM

கூடலுார்: கூடலுார் புளியாம்பாறை, கோவை வேளாண் பல்கலைக்கழக நெல் ஆராய்ச்சி மையத்தில், பூஜையுடன் நெல் விதைக்கும் பணி துவக்கப்பட்டது.
கூடலுார் பகுதியில், நடப்பு ஆண்டு ஜூன் மாதம் பெய்ய வேண்டிய பருவமழை ஏமாற்றியதால், பாசன நீரின்றி நெல் விவசாயத்தை துவங்க முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக பருவமழை தீவிரம் அடைந்த நிலையில், நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்து, விவசாயிகள் நெல் விவசாயத்தில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.
அதில், புளியாம்பாறை பகுதியில் உள்ள, கோவை வேளாண் பல்கலைக்கழக ஒட்டு நெல் ஆராய்ச்சி மையத்தில், நெல் விவசாயம் மேற்கொள்வதற்காக உழவு பணிகள் துவக்கப்பட்டுள்ளது.
அதில், நேற்று காலை, வயலில் பூஜை செய்து நெல் விதைக்கும் துவக்கப்பட்டது.
அதிகாரிகள் கூறுகையில், ‘ஆராய்ச்சி மையத்தில், ஆராய்ச்சிக்கான நெல் வகைகளுடன், விவசாயிகளுக்கான விதை நெல் உற்பத்தி செய்து வருகிறோம். தற்போது பருவமழை தீவிரமடைந்து நிலையில், வயல்களில் உழவு பணிகளை மேற்கொண்டு ஆராய்ச்சிக்கான நெல் ரகங்கள், விவசாயிகளுக்கு வழங்குவதற்கான விதை நெல் பயிரிடும் பணியை துவங்கி உள்ளோம். இம்மாதம் கடைசி அல்லது அடுத்த மாதம் துவக்கத்தில் நெல் நாற்று நடவு பணி நடக்கும்,’ என்றனர்.
