/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அழுகிய மீன்கள் பறிமுதல் கடைக்காரருக்கு அபராதம்
/
அழுகிய மீன்கள் பறிமுதல் கடைக்காரருக்கு அபராதம்
ADDED : செப் 02, 2024 02:19 AM
கோத்தகிரி;கோத்தகிரியில் அழுகிய மீன்கள் பறிமுதல் செய்த அதிகாரிகள், கடை உரிமையாளருக்கு அபராதம் விதித்தனர்.
கோத்தகிரி மார்க்கெட் மற்றும் காந்தி மைதானம் பகுதியில், இறைச்சி கடைகளில் அழுகிய மீன்கள் விற்பனை செய்வதாக, உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கு புகார் கிடைத்தது.
உணவு பாதுகாப்பு அதிகாரி குமரகுருபரன் தலைமையில், அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, காந்தி மைதானம் பகுதியில், யாகூப் என்பவரது கடையில், 16 கிலோ அழுகிய மீன்கள், விற்பனைக்கு வைக்கப்பட்டது தெரியவந்தது.
மீன்களை பறிமுதல் செய்த அலுவலர்கள், கடை உரிமையாளருக்கு, 1,000 ரூபாய் அபராதம் விதித்தனர். தவிர, உணவு பாதுகாப்பு சட்ட பிரிவின் கீழ், எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.
உணவு பாதுகாப்பு அதிகாரி குமரகுருபரன் கூறுகையில், ''கோத்தகிரியில் பெரும்பாலான கடைகளில் அழுகிய மீன்கள் விற்பனை செய்வதாக, புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மக்கள் நலன் கருதி, தொடர்ந்து ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,''என்றார்.
மேலும், ஊட்டி நகரில் ஒரு சிறிய உணவகத்தின் உணவில் புழு இருந்ததாக, சமூக வலைதளங்களில் 'வீடியோ' பரவியது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.