/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொடரும் மழையால் பொதுமக்கள் பாதிப்பு
/
தொடரும் மழையால் பொதுமக்கள் பாதிப்பு
ADDED : ஜூன் 26, 2024 09:17 PM

பந்தலுார் : பந்தலுார் பகுதியில் பருவமழையின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்படுகிறது.
மழையின் காரணமாக பொன்னானி மற்றும் சோலாடி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில், பாலாவயல், கல்பறா, மணல் வயல் உள்ளிட்ட பகுதிகளில் ஆற்று வெள்ளம் தோட்டங்களில் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.
நேந்திரன் வாழை மற்றும் மரவள்ளி, பாக்கு தோட்டங்களில் ஆற்று வெள்ளம் புகுந்ததால், விவசாயம் பாதிக்கப்பட்டது. மேலும், சர்க்கரை குளம், மணல்வயல், வட்டக்கொல்லி, வெள்ளேரி பகுதிகளிலும் பாதிக்கப்பட்டன.
பந்தலுார் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் வாசுதேவன், வி.ஏ.ஓ., அசோக் குமார் உள்ளிட்டோர் கிராம மக்களை நேரில் ஆய்வு செய்து பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினர். மேலும், வெள்ளேரி, அம்பலமூலா, பொன்னானி பகுதிகளில் தற்காலிக முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பந்தலுார் நத்தம் பகுதியில் வீட்டின் பின்பக்க தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில், ராதாகிருஷ்ணன் மற்றும் ஜெமிலா ஆகியோரின் வீடுகள் சேதமடைந்தன. உப்பட்டி மேஸ்திரிக்குன்னு, தேவாலா பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் வருவாய் துறையினர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.