/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புதிதாக 16 ஊராட்சிகள் உருவாக்க அரசுக்கு பரிந்துரை: குன்னத்தூர் ஊராட்சி மக்கள் எதிர்ப்பு
/
புதிதாக 16 ஊராட்சிகள் உருவாக்க அரசுக்கு பரிந்துரை: குன்னத்தூர் ஊராட்சி மக்கள் எதிர்ப்பு
புதிதாக 16 ஊராட்சிகள் உருவாக்க அரசுக்கு பரிந்துரை: குன்னத்தூர் ஊராட்சி மக்கள் எதிர்ப்பு
புதிதாக 16 ஊராட்சிகள் உருவாக்க அரசுக்கு பரிந்துரை: குன்னத்தூர் ஊராட்சி மக்கள் எதிர்ப்பு
ADDED : ஜூலை 03, 2024 10:04 PM
அன்னுார் : குன்னத்தூர் ஊராட்சியை இரண்டாக பிரிக்க, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, மனு அளித்தனர்.
வளர்ச்சிப் பணிகளை வேகப்படுத்தவும், அரசின் அனைத்து திட்டங்களும் பயனாளிகளுக்கு தாமதம் இல்லாமல் கிடைக்கவும், பெரிய ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் ஊராட்சிகளை இரண்டாகப் பிரித்து, கூடுதல் பணியிடங்களை உருவாக்கும்படி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இச்சங்க நிர்வாகிகள் மக்கள் தொகை அடிப்படையில், அன்னுார் ஒன்றியத்தில் உள்ள 21 ஊராட்சிகளுடன், கூடுதலாக, 16 ஊராட்சிகளை உருவாக்க பரிந்துரைத்துள்ளனர்.
மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சியை மூன்றாகப் பிரிக்க அறிவுறுத்தியுள்ளனர். காரே கவுண்டன்பாளையம், ஒட்டர்பாளையம், குன்னத்தூர், கஞ்சப்பள்ளி, ஆம்போதி, வடக்கலூர், பொகலூர், கரியாம்பாளையம் உள்ளிட்ட 14 ஊராட்சிகளை இரண்டாகப் பிரிக்க, அரசுக்கு வரைவு அறிக்கை அனுப்பி உள்ளது. இதற்கு சில ஊராட்சிகளில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
குன்னத்தூர் பொதுமக்கள் நேற்று முன்தினம் கோவை கலெக்டர் அலுவலகத்தில்,குன்னத்தூர் ஊராட்சியை இரண்டாக பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.'குன்னத்தூர் ஊராட்சியின் பரப்பளவு குறைவு. ஆறு குக்கிராமங்கள் மட்டுமே உள்ளன. இதை பிரித்தால் ஏற்றத்தாழ்வு ஏற்படும். வளர்ச்சிப் பணிகள் செய்ய முடியாது. எனவே பிரிக்கக் கூடாது,' என்றனர்.
கலெக்டர் அலுவலக அதிகாரிகள் 'இதுகுறித்து ஊராட்சியிலும், கிராம சபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றி தந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர். இதையடுத்து பொதுமக்கள் நேற்று குன்னத்தூர் ஊராட்சி அலுவலகத்தில், ஊராட்சி செயலர் ஈஸ்வரனிடம், குன்னத்தூர் ஊராட்சியை பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர். ஊராட்சி மன்ற கூட்டத்திலும், கிராம சபையிலும், இதற்கான தீர்மானம் நிறைவேற்றித் தரும்படி கோரிக்கை விடுத்தனர்.