/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மதுரை ஐகோர்ட் உத்தரவின் படி முதுமலையில் அன்னிய மரங்கள் அகற்றம்
/
மதுரை ஐகோர்ட் உத்தரவின் படி முதுமலையில் அன்னிய மரங்கள் அகற்றம்
மதுரை ஐகோர்ட் உத்தரவின் படி முதுமலையில் அன்னிய மரங்கள் அகற்றம்
மதுரை ஐகோர்ட் உத்தரவின் படி முதுமலையில் அன்னிய மரங்கள் அகற்றம்
ADDED : பிப் 27, 2025 09:55 PM

கூடலுார், ; 'மதுரை ஐகோர்ட் உத்தரவின் படி, முதுமலையில் அன்னிய மரங்களை அகற்றப்படும் பணி துவக்கப்பட்டுள்ள நிலையில், வேர்களையும் அகற்றினால் மீண்டும் வளர்வதை முழுமையாக தடுக்க முடியும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் வன பரப்பை, 33 சதவீதமாக அதிகரிக்க, மாநில வனத்துறை சோலை மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதில், 65 சதவீதம் வனம் சூழ்ந்த பகுதியான, நீலகிரி மாவட்டத்தில் கற்பூரம், சென்னர், சீகை, உண்ணி உள்ளிட்ட அன்னிய மரங்கள், செடிகள் அதிகரிப்பதால், வனவிலங்குகளின் உணவு தேவை பூர்த்தி செய்யும் தாவரங்கள் வளர்வதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
இதனால், நீலகிரியில் உள்ள அன்னிய மரங்களை அகற்ற ஐகோர்ட் மதுரை கிளை, 2023ல் உத்தரவிட்டது.
தொடர்ந்து, முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் மசினகுடி வனப் பகுதியில் வளர்ந்துள்ள அன்னிய மரங்களை ஒப்பந்த முறையில் அகற்றி, அவை தமிழ்நாடு அரசு காகித ஆலை மற்றும் தனியார் காகித ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், நடப்பாண்டு மீண்டும் முதுமலையில் அன்னிய மரங்கள்; களைச்செடிகளை அகற்றும் பணிக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.
தற்போது, மரங்களை வெட்டி அகற்றி, காகித ஆலைகளுக்கு கொண்டு செல்லும் பணி நடந்து வருகிறது.
வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில்,'கோர்ட் உத்தரவின்படி வனப்பகுதியில் பயனற்ற அன்னிய செடிகளை அகற்றுவது வரவேற்கக் கூடியது.
ஆனால், அதன் வேர் பகுதிகள் முழுமையாக அகற்றப்படாததால், அவை மீண்டும் வளர்ந்து வனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் உள்ளது.
எனவே, அன்னிய மரங்களை வேரோடு அகற்றி அவை மீண்டும், வளர்வதை முழுமையாக தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.