குடியிருப்பில் கருஞ்சிறுத்தை தலைகுந்தா மக்கள் பீதி
குடியிருப்பில் கருஞ்சிறுத்தை தலைகுந்தா மக்கள் பீதி
ADDED : ஜூலை 05, 2026 09:00 PM
ஊட்டி :
ஊட்டி தலைகுந்தா பகுதியில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த கருஞ்சிறுத்தையால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக வனவிலங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உணவு, தண்ணீர் தேடி வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன. குறிப்பாக கரடிகள், சிறுத்தைகள், யானைகள் குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி வலம் வருகின்றன. குடியிருப்பு பகுதிக்கு வந்த பிறகு மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லாமல் குடியிருப்பு பகுதியை ஒட்டிய வனப்பகுதிக்குள் பதுங்கிக் கொள்கின்றன இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகின்றன. நேற்று முன்தினம் இரவு ஊட்டி தலைகுந்தா பகுதியில் கருஞ்சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதியில் சாவகாசமாக உலா வந்தது. கருஞ்சிறுத்தை நடமாட்டம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
சிறுத்தைகள் ஊருக்குள் நுழையும் சம்பவங்களுக்கு வனத்துறையினர் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் நாட்களில் இரவு நேரங்களில் வனத்துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
