/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையில் கழிவு நீர்: மாணவர்கள் பாதிப்பு
/
சாலையில் கழிவு நீர்: மாணவர்கள் பாதிப்பு
ADDED : ஜூன் 23, 2024 11:54 PM

பந்தலுார்:பந்தலுார் அருகே நத்தம் பகுதியில் நடைபாதையில் கழிவுநீர் தேங்கி உள்ளதால், காலை, மாலை நேரத்தில் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பந்தலூர் நத்தம் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது.
கூவமூலா செல்லும் தார் சாலையில் இருந்து கிராமத்திற்கு செல்லும் சிமென்ட் சாலை பிரிந்து செல்கிறது.
சிமென்ட் சாலையின் இரண்டு பக்கமும் குடியிருப்புகள் உள்ள நிலையில், மழை மற்றும் கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி இல்லாத நிலையில், இங்கிருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் மழை நீர் முழுமையாக நடைபாதையில் தேங்கி நின்று பல்வேறு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
மழை பெய்தால் இந்த சாலையை கடந்து செல்ல முடியாமல் மக்கள் மற்றும் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். காலை நேரத்தில் சீருடையுடன் வரும் மாணவர்கள், கால் இடறினால் கழிவுநீரில் விழுந்து பள்ளிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. மேலும் முதியவர்கள், நோயாளிகள் சிரமப்பட்டு நடந்து வரும் நிலையில், தண்ணீர் தேங்கி நின்று கொசுக்கள் உற்பத்தி இடமாக மாறி உள்ளது. இது குறித்து, மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தியும், தீர்வு காணவில்லை.
எனவே, இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், கழிவுநீர் மற்றும் மழைநீர் வடியும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.