/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அய்யா...கிணற்றை காணோம் ; பந்தலுார் பெரும்பள்ளி மக்கள் புகார்
/
அய்யா...கிணற்றை காணோம் ; பந்தலுார் பெரும்பள்ளி மக்கள் புகார்
அய்யா...கிணற்றை காணோம் ; பந்தலுார் பெரும்பள்ளி மக்கள் புகார்
அய்யா...கிணற்றை காணோம் ; பந்தலுார் பெரும்பள்ளி மக்கள் புகார்
ADDED : மே 28, 2024 11:56 PM

பந்தலுார்;'பந்தலுார் அருகே பெரும்பள்ளி கிராம மக்கள், தங்கள் கிராமத்தில் காணாமல் போன கிணற்றை கண்டு பிடித்து தர வேண்டும்,' என்ற நுாதன மனுவை ஊராட்சி செயலாளரிடம் அளித்துள்ளனர்.
பந்தலுார் அருகே நெலாக்கோட்டை ஊராட்சியின்,4-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்து பெரும்பள்ளி கிராமம் உள்ளது. அங்கு, 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ள நிலையில், போதிய குடிநீர் வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கிராமத்துக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வகையில், ஊராட்சி மூலம், 15வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ், 4 லட்சம் ரூபாய் செலவில் தரைமட்ட நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. தொட்டி அமைத்து பல மாதங்கள் கடந்த நிலையில், தொட்டிக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கான குடிநீர் கிணறு மற்றும் குழாய்கள் ஏதும் அமைக்கப்படவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த பெரும்பள்ளி கிராம மக்கள்,'இங்கு வெறும் தொட்டி மட்டுமே கட்டி வைக்கப்பட்டு உள்ளது. தொட்டிக்கு தண்ணீர் வினியோகம் செய்யும் கிணற்றை ஊராட்சி நிர்வாகம் தேடி கண்டுபிடித்து பொது மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்,'என, வலியுறுத்தி ஊராட்சி தலைவர் மற்றும் செயலாளரிடம் மனு கொடுத்தனர்.
இப்பகுதியை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் கூறுகையில்,''பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு பதில், ஒப்பந்ததாரர்கள் மற்றும் சில அதிகாரிகள் பயன்பெறும் வகையில், இது போன்று நிதி விரயம் செய்வதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இதனை வலியுறுத்தும் விதமாக, 'கிணற்றை கண்டுபிடித்து தர வேண்டும்,' என, புகார் மனு கொடுத்துள்ளோம்,'' என்றார்.