/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தலுார் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள...குடிசைகள் ஆய்வு!விதிகளை தளர்த்தி வீடு வழங்க அறிவுரை
/
பந்தலுார் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள...குடிசைகள் ஆய்வு!விதிகளை தளர்த்தி வீடு வழங்க அறிவுரை
பந்தலுார் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள...குடிசைகள் ஆய்வு!விதிகளை தளர்த்தி வீடு வழங்க அறிவுரை
பந்தலுார் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள...குடிசைகள் ஆய்வு!விதிகளை தளர்த்தி வீடு வழங்க அறிவுரை
ADDED : மே 28, 2024 12:25 AM

பந்தலுார்:பந்தலுார் பகுதியில் உள்ள குடிசைகளை, நீதிபதி சிவக்குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
பந்தலுார் அருகே சேரங்கோடு பகுதியில் இருந்து சேரம்பாடிவரை, கேரளா மாநிலம் வயநாடு செல்லும் மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் அதிக அளவிலான மக்கள் குடிசைகளில் வசித்து வருகின்றனர். அதில், ஒரு சிலவற்றில் ஆதரவற்ற முதியவர்கள் குடியிருந்து வரும் நிலையில், இவர்களின் குடிசைகள் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் ஆபத்தான சூழலில் உள்ளது.
மத்திய இணைஅமைச்சர் பரிந்துரை
அப்பகுதிகளில், சாலை வழியாக வரும் யானைகள் அவ்வப்போது குடிசைகளை பதம் பார்ப்பதால், இடிந்து, சேதமான குடிசைகள் அதிக அளவில் உள்ளன. இவர்களுக்கு மாற்று இடம் வழங்கும் வகையில், மத்திய இணை அமைச்சர் முருகன் கடந்த, சில ஆண்டுகளுக்கு முன்னர், இப்பகுதியில் ஆய்வு செய்து வீட்டுமனை மற்றும் வீடுகள் கட்டித் தர பரிந்துரை செய்தார்.
தொடர்ந்து காரக்கொல்லி என்ற இடத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.
ஒதுக்கீடுக்கு ஒரு லட்சம் ரூபாய்
ஆனால், 'குடிசைவாசிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டுமானால், சம்பந்தப்பட்ட பயனாளிகள் தலா ஒரு லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்,' என, குடிசை மாற்று வாரியம் உத்தரவு பிறப்பித்தது.
சாலை ஓரத்தில் குடியிருக்கும் ஏழை பயனாளிகளால் இந்த தொகை செலுத்த முடியாத நிலையில், டான்டீயில் ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு அந்த அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அடுக்குமாடி குடியிருப்புகளில் எந்தவித வசதிகளும் இல்லாத நிலையில், அங்கு குடியேற தொழிலாளர்கள் மறுத்துவிட்டனர்.
ஆய்வு செய்த நீதிபதி
இந்நிலையில், சேரங்கோடு பகுதியில் சாலையோர குடிசைகளில் வாழும் மக்களின் நிலை குறித்து அறிந்த, பந்தலுார் நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.
அதில் சில குடிசைகள் வசிக்க கூட முடியாத சூழலில் ஆபத்தான நிலையில் உள்ளதுடன், எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் இருப்பது தெரிய வந்தது.
அப்போது, நீதிபதி சிவக்குமார் கூறுகையில்,''இது போன்ற ஏழைகளுக்கு வீடுகள் வழங்கும் வகையில், குடிசை மாற்று வாரியத்தில் பேசி, ஒரு லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்ற விதிமுறையை தளர்த்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என, இலவச சட்டப் பணிகள் ஆணைக்குழு; வருவாய் துறையினரிடம் அறிவுறுத்தினார்.
அப்பகுதி மக்கள் கூறுகையில், 'இங்குள்ள குடிசை வாசிகளுக்கு எங்கிருந்து ஒரு லட்சம் ரூபாய் செலுத்த முடியும். அதனை ரத்து செய்து, உண்மையான ஏழைகளுக்கு வீடுகிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.