/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மழைக்கு பின் வெயில்: தேயிலை மகசூல் அதிகரிக்கும்
/
மழைக்கு பின் வெயில்: தேயிலை மகசூல் அதிகரிக்கும்
ADDED : செப் 07, 2024 03:22 AM

குன்னுார்:'நீலகிரி மாவட்டத்தில் நிலவும் காலநிலையால் இந்த மாதம், 15 சதவீதம் வரை தேயிலை மகசூல் அதிகரிக்கும்,' என, உபாசி வேளாண் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது
நீலகிரி மாவட்டத்தில் ஒரு லட்சத்து, 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.
தோட்டங்களில் எடுக்கும் பசுந்தேயிலை மாவட்டத்தில் உள்ள, 245 தொழிற்சாலைகளில் தேயிலை துாளாக உற்பத்தி செய்யப்படுகிறது. 4 கிலோ பசுந்தேயிலையில் ஒரு கிலோ தேயிலை துாள் உற்பத்தி செய்யப்படுகிறது.
தமிழகத்தில் ஆண்டிற்கு, 14 கோடி கிலோ தேயிலை துாள் உற்பத்தி செய்யப்படும் நிலையில், 90 சதவீதம் நீலகிரியில் உற்பத்தியாகிறது.
பொதுவாக பசுந்தேயிலை மகசூல் அக்., நவ., மாதங்களில் அதிகமாகவும், ஜன., முதல் ஏப்., வரை குறைவாகவும் இருக்கும்.
போதுமான மழைக்கு பிறகு ஒரு நாளைக்கு, 4 மணி நேரம் சூரிய ஒளி இருந்தால் பசுந்தேயிலைக்கு நோய் பாதிக்காது. இந்த ஆண்டு கடந்த ஜூலை மாதத்தில் இருந்து தொடர்ந்து பல நாட்கள் கன மழை பெய்தது. தொடர்ந்து போதிய சூரிய ஒளியும் கிடைத்தது.
உபாசி வேளாண் ஆராய்ச்சி மைய உதவி இயக்குனர் முருகேசன் கூறுகையில்,''மழையை தொடர்ந்து சூரிய ஒளி அதிகம் இருந்ததால், இந்த மாதம் பசுந்தேயிலை மகசூல், 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்கும்,''என்றார்.