/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வெயிலின் தாக்கம் : கருகிய தேயிலை செடி
/
வெயிலின் தாக்கம் : கருகிய தேயிலை செடி
ADDED : ஏப் 22, 2024 01:38 AM

பந்தலுார்:பந்தலுார் பகுதியில் கோடை வெயிலின் தாக்கத்தால் தேயிலை செடிகள் கருகி விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
பந்தலுார் பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. இதனால், நீரோடைகள் மற்றும் குடிநீர் கிணறுகளில், தண்ணீர் வற்றி வறண்டு காணப்படுகிறது. மக்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் சிரமப்படும் சூழல் அதிகரித்து வருகிறது.
குடிநீர் கிணறுகளில் தண்ணீர் வற்றியதால் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் லாரிகளில் தண்ணீர் கொண்டு போய் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், பழங்குடியின கிராமங்கள் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தண்ணீர் கிடைக்காமல் போராடும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
இதில், விவசாய தோட்டங்களுக்கு தேவையான தண்ணீர் இல்லாத நிலையில், விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. தேயிலை தோட்டங்கள், நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் தேயிலை செடிகள் காய்ந்து கருகி வருகிறது.
பசுந்தேயிலைக்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கோடை வெயிலின் தாக்கத்தால் தேயிலை செடிகள் கருகி வருவதால் மேலும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.
தேயிலை விவசாயிகள் சங்க நிர்வாகி விஜயகுமார் கூறுகையில், ''ஏற்கனவே தேயிலை தொழிலை சார்ந்த விவசாயிகள், பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இயற்கையும் பாதிப்பை ஏற்படுத்தி வருவது பெருத்த நஷ்டத்தை உருவாக்கியுள்ளது. இதனால் தேயிலை விவசாயத்தின் மீதான நாட்டம் விவசாயிகள் மத்தியில் குறைந்து வருகிறது,'' என்றார்.

