/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கறவை மாடுகள் வாங்க கடன் வங்கி மேலாளர் பேச்சு
/
கறவை மாடுகள் வாங்க கடன் வங்கி மேலாளர் பேச்சு
ADDED : ஆக 23, 2024 12:37 AM

மேட்டுப்பாளையம்:கறவை மாடுகள் வாங்கவும், பராமரிக்கவும், கொட்டகை அமைக்கவும் கடன் வழங்கப்படும், என, கனரா வங்கி மேலாளர் ரஞ்சனி பேசினார்.
கோவை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியம், அன்னூர் பால் சேகரிப்பு குழு சார்பில், காரமடை அருகே உள்ள தேரம்பாளையத்தில், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில், கறவை மாடு வளர்ப்பு கடன் வழங்குவது குறித்து கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆவின் விரிவாக்க அலுவலர் கீதா தலைமை வகித்தார். விரிவாக்க அலுவலர் கணேஷ்குமார் வரவேற்றார். பெள்ளேபாளையம் கனரா வங்கி மேலாளர் ரஞ்சனி பேசியதாவது:-
அரசு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில், பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில், கறவை மாடுகள் வாங்கவும், அதை பராமரிக்கவும், கொட்டகை அமைக்கவும் கடன் வழங்கப்படுகிறது. பால் உற்பத்தியாளருக்கு ஒரு லட்சத்து, 60 ஆயிரம் ரூபாய் வரை எவ்வித அடங்கல் (ஆவணங்கள்) இல்லாமல் கடன் வழங்கப்படும். அரசு வங்கிகளில், ஒரு மாடு பராமரிப்புக்கு, 14 ஆயிரம் ரூபாயும், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில், 18 ஆயிரம் ரூபாயும் கடன் வழங்கப்படும்.
வாங்கிய கடனை முறையாக திருப்பி செலுத்தும் பட்சத்தில், 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும். கூட்டுறவு வேளாண் சங்கத்தில் வட்டி இல்லாத கடனாக வழங்கப்படும். இந்த கடன் பெற பான் கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றின் ஜெராக்ஸ் வழங்க வேண்டும்.
மேலும் புதிதாக கறவை மாடு வாங்கும் போது, கால்நடை டாக்டரின் சான்றிதழ் வாங்கி வரவேண்டும். எனவே இந்த வாய்ப்பை பால் உற்பத்தியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு மேலாளர் பேசினார்.
கூட்டத்தில் கால்நடை டாக்டர் சதீஸ்குமார், வங்கி மேலாளர் ஹீதா, தொடக்க கூட்டுறவு சங்க செயலாளர் புஷ்பா, நூலகர் கருப்புசாமி மற்றும் பால் உற்பத்தியாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், 12 பேர் புதிதாக கறவை மாடு வாங்கவும், 10 பேர் பராமரிப்பு கடன் கேட்டும் விண்ணப்பம் கொடுத்தனர். விரிவாக்க அலுவலர் நந்தகுமார் நன்றி கூறினார்.