ADDED : மே 29, 2024 10:13 PM

பந்தலுார்:
பந்தலுார் பஜாரில் இருந்து நெல்லியாளம் நகராட்சி அலுவலக சாலை வழியாக, நீதிமன்றம், அங்கன்வாடி, அரசு ஆரம்பப்பள்ளி மற்றும் முருகன் கோவில் செல்லும் சாலை அமைந்துள்ளது.
இந்த சாலையில் நீதிமன்றம் அருகே தாழ்வான சாலைப் பகுதியில் சேதம் ஏற்பட்டு பல மாதங்கள் ஆகிறது. இங்கு வாகனங்கள் சென்று திரும்பி வருவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால் அங்கன்வாடி குழந்தைகளை பெற்றோர் நடந்து வந்து, அங்கன்வாடி மையத்திற்கு கொண்டு சென்று விட வேண்டி உள்ளது.
பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்ல வரும் வாகனம், மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்டு மாணவர்களை வரிசையாக அழைத்து வந்து ஏற்றி செல்கின்றனர்.
இந்த சாலையை சீரமைத்து தர இப்பகுதி மக்கள் நெல்லியாளம் நகராட்சி நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். நகராட்சி கண்டு கொள்ளாத நிலையில், வேறு வழி இன்றி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில், பொதுமக்கள் இணைந்து சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால், வாகன வசதி இன்றி பல்வேறு சிரமப் பட்ட பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பயன் ஏற்பட்டுள்ளது.
மக்கள் கூறுகையில், 'இந்த சாலை வழியாக 'டிப்பர்' லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களை இயக்காமல் சிறு வாகனங்களை இயக்கினால் சாலை சேதம் ஏற்படாமல் பாதுகாக்கப்படும்,' என்றனர்.