ADDED : ஜூன் 14, 2026 07:12 PM
பாலக்காடு: தமிழகத்தைச்சேர்ந்த பக்தர் ஒருவர், ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு பாலக்காடு வழியாகச் சென்றுள்ளார். அப்போது பாலக்காடு ரயில் நிலைய ஓய்வறையில் தங்கியிருந்த அவர், குளிப்பதற்காகச் சென்றுள்ளார்.
இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள், அவரது பையைத் திருடிக்கொண்டு தப்பினர்.
அதில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு மொபைல் போன்கள், 15 ரூபாய் பணம், 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரம் ஆகியவை இருந்ததாக, பாதிக்கப்பட்ட பயணி போலீசில் புகார் அளித்தார்.
புகாரைத் தொடர்ந்து, பிரவீன் தலைமையிலான ரயில்வே போலீசார் மற்றும் ஷிஜு தலைமையிலான ரயில்வே பாதுகாப்பு தனிப்படையினர், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மொபைல் சிக்னல் மற்றும் சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில், குற்றவாளிகளை கோழிக்கோட்டில் பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள் கோழிக்கோடு குற்றியாடியைச்சேர்ந்த அல்தாப், 32, திருச்சூர் சிற்றிலப்பள்ளியைச் சேர்ந்த பிரான்சிஸ், 52, ஆகியோர் என்பதும், இதில் அல்தாப் மீது, ஏற்கனவே கோழிக்கோட்டில் உள்ள பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. திருடப்பட்ட பொருட்களை மீட்டு இருவரை போலீசார் கைது செய்தனர்.
