/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கடைகளுக்குள் தண்ணீர் வியாபாரிகள் கண்ணீர்
/
கடைகளுக்குள் தண்ணீர் வியாபாரிகள் கண்ணீர்
ADDED : ஆக 06, 2024 06:05 AM

மேட்டுப்பாளையம்: கனமழை காரணமாக நகராட்சி கடைகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், பொருட்கள் சேதம் அடைந்தன.
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, நகராட்சிக்கு சொந்தமான அண்ணா வணிக வளாகம் உள்ளது. இதில், உள்ள காலியிட தரை தளத்திற்கு, கான்கிரீட் போடப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலத்தில் அனைத்து தண்ணீரும், கிழக்குப் பகுதியில் உள்ள கடைகளுக்கு வருகின்றன.
நகராட்சி கடை வியாபாரிகள் கூறியதாவது: அண்ணா வணிக வளாகத்தில் கிழக்குப் பகுதியில், 14 கடைகள் மிகவும் தாழ்வாக கட்டப்பட்டுள்ளன. கடைகளுக்கும், காலி இடத்திற்கும் இடையே, சிறிய அளவில் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இதை சுத்தம் செய்யாததால் மண் நிறைந்துள்ளது. சிறிதளவு மழை பெய்தாலும், காலியிடங்களில் இருந்து வரும் தண்ணீர் கடைகளுக்குள் புகுந்து விடுகிறது.
நேற்று முன்தினம் மாலை பெய்த கனமழையால், அண்ணா வணிக வளாக கிழக்குப் பகுதியில் உள்ள கடைகளின் உள்ளே, அதிக அளவில் மழை நீர் புகுந்தது. இதனால் பொருட்கள் தண்ணீரில் நனைந்தன.
ஒவ்வொரு வியாபாரிக்கும் ஆயிரம் ரூபாய்க்கும் மேற்பட்ட, மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன. கடையின் உள்ளே இருந்த தண்ணீரை வெளியேற்ற, நீண்ட நேரம் ஆனது.
எனவே கடைகளின் முன், மழை நீர் வடிகாலில் உள்ள மண்ணை அகற்றி, தண்ணீர் தடையில்லாமல் செல்ல, நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வியாபாரிகள் கண்ணீர் மல்க கூறினர்.