/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எங்கு பார்த்தாலும் நீர்வீழ்ச்சி: கண்கொள்ளா காட்சி
/
எங்கு பார்த்தாலும் நீர்வீழ்ச்சி: கண்கொள்ளா காட்சி
ADDED : ஜூலை 25, 2024 10:14 PM

கூடலுார்: கூடலுார் ஓவேலி வனப்பகுதிகளில் பருவமழையை தொடர்ந்து உருவாகியுள்ள நீர்வீழ்ச்சி கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது.
கூடலுார், நடுவட்டம், மசினகுடி பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்து நிலத்தடி நீர் உயர்ந்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், இங்கு நிலவும் மிதமான காலநிலை சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.
'தென்னகத்தின் நீர் தொட்டி' என்று அழைக்கப்படும் ஓவேலி வனப்பகுதியில் உற்பத்தியாகும் ஆறுகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், இப்பகுதியில் எங்கு திரும்பினாலும், பசுமை வனம், வெண்மை நிறத்தில் விழும் நீர்வீழ்ச்சிகள், அவ்வப்போது படர்ந்து செல்லும் மேகமூட்டம், பசுமையான தேயிலை தோட்டங்கள் உள்ளூர் மக்களை மட்டுமின்றி அப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
உள்ளூர் மக்கள் கூறுகையில்,'மழையால் பாதிப்புகள் இருந்தாலும், கோடையில் வறண்டு கிடந்த இப்பகுதி ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தற்போது, கண்களுக்கும், மனதுக்கும் இதமாக உள்ளது. பெரும்பாலான இடங்களில் மழையின் போது, ஆறுகள் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் மண் கலந்த நிலையில் காணப்படும். இங்குள்ள நீர்வீழ்ச்சிகள், ஆறுகளில், மழையின் போது வெள்ளம் ஏற்பட்டாலும், ஆறுகளில் தண்ணீர் வெண்மையாக காட்சியளிப்பது இப்பகுதியின் சிறப்பாகும். இயற்கையை விரும்பும் சுற்றுலா பயணிகளுக்கு இப்பகுதிக்கு சொர்க்கமாக உள்ளது,' என்றனர்.