/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வயநாடு பேரிடர் சம்பவம் நமக்கு பாடம் இயற்கை அழிப்பை தவிர்க்க கருத்தரங்கில் 'அட்வைஸ்'
/
வயநாடு பேரிடர் சம்பவம் நமக்கு பாடம் இயற்கை அழிப்பை தவிர்க்க கருத்தரங்கில் 'அட்வைஸ்'
வயநாடு பேரிடர் சம்பவம் நமக்கு பாடம் இயற்கை அழிப்பை தவிர்க்க கருத்தரங்கில் 'அட்வைஸ்'
வயநாடு பேரிடர் சம்பவம் நமக்கு பாடம் இயற்கை அழிப்பை தவிர்க்க கருத்தரங்கில் 'அட்வைஸ்'
ADDED : ஆக 13, 2024 01:55 AM

குன்னுார்;'வயநாடு பேரிடரில் இருந்து நாம் பாடம் கற்று கொள்ளவில்லை எனில், இனி கடவுள் கூட பூமியை காப்பாற்ற முடியாது,' என, கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
குன்னுார் அருகே ஜெகதளா ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் சுற்றுச்சூழல் கருத்தரங்கு நடந்தது. பள்ளி தலைமையாசிரியை மும்தாஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜு சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:
சமீபத்தில் கேரளாவில், வயநாடு பேரிடர், ஜார்கண்ட் மாநிலத்தில் கனமழை, நிலச்சரிவு ; கடந்த ஜூலை மாதம் வட மாநிலங்களில் வீசிய வெப்ப அலை போன்றவற்றால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. மனிதர்களின் பேராசையும், நுகர்வு கலாசார மோகமும், பூமியின் காலநிலை மாற்றத்திற்கு காரணமாகி பேரிடருக்கு வழி வகுக்கிறது.
வளர்ச்சியின் பெயரில் இயற்கை சூறையாடப்படுகிறது. உற்பத்தியின் பெயரால் இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன. மின்சக்தி இல்லாமல் எந்த உற்பத்தியும் இல்லை என்பதால் வடசென்னை எண்ணுார் அனல் மின் நிலையத்தில், 400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க ஒரு நாளைக்கு, 36 ஆயிரம் டன் நிலக்கரி எரிக்கப்படுகிறது. 96 கோடி லிட்டர் தண்ணீர் செலவாகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் 4 கிலோ கார்பன் டை ஆக்சைடு வெளியிடுகிறது. இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
தொழிற்சாலைகளில் இருந்து வெளிப்படும் நைட்ரஸ் ஆக்சைடு தன் பங்கிற்கு புவியை சூடு படுத்தி வருகிறது. கடந்த, 150 ஆண்டுகளில் பூமியின் வெப்பம், 1.14 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது.
2050ம் ஆண்டுக்குள் பூமியின் வெப்பநிலை, 3ல் இருந்து 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
தற்போது, பூமி தாயின் மூச்சு குழாயை அடைத்து கொண்டிருக்கும் 'பிளாஸ்டிக்' குப்பைகள், மைக்ரோ பிளாஸ்டிக் பெயரில் தாய்ப்பால் மற்றும் ரத்தத்தில் கலக்கிறது. மனித குல அழிவுக்கு இயற்கை வழி வகுத்து விட்டதாக தோன்றுகிறது.
இயற்கையை நாம் ஒரு அடி அடித்தால், இயற்கை திருப்பி, 100 மடங்கு வலிமையுடன் தாக்கும் என்று கூற்று தற்போது கண்கூடாக தெரிகிறது. வயநாடு பேரிடரில் இருந்து நாம் பாடம் கற்று கொள்ளவில்லை எனில், இனி கடவுள் கூட பூமியை காப்பாற்ற முடியாது. இவ்வாறு ராஜு பேசினார்.

