ADDED : ஜூன் 19, 2026 05:50 PM
குன்னுார்: குன்னுார் வெலிங்டன் பகுதியை சேர்ந்த முரளி என்பவரின் மனைவி கார்த்திகா, வங்கி கடன் பிரச்னை தொடர்பாக, சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், குன்னுாரில் எஸ்.பி.ஐ., வங்கி கிளை முன்பு, மா.கம்யூ சார்பில் நேற்று முற்றுகை போராட்டம் நடந்தது. மா.கம்யூ., செயலாளர் வினோத்குமார் தலைமை வகித்தார். தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் வெலிங்டன் போலீசார், வங்கியின் முதன்மை மேலாளர் வயோம் சேத்ரி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், கம்யூ., கட்சி நிர்வாகிகள் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட குடும்பத்தில் இரு மகள்களுக்கு கல்வி செலவு உட்பட உரிய இழப்பீடு வழங்க வேண்டும்; இறந்தவரின் கணவர்,7 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்த நிலையில், அவர் மாத சம்பள வரவில், 25 சதவீத தொகையை விடுவிக்க வேண்டும்,’ என, வலியுறுத்தப்பட்டது.
தொடர்ந்து, ‘இப்பிரச்னை குறித்து நேரடியாக விவாதிக்க, முரளி மற்றும் வங்கி ஊழியரிடையே நேரடி சந்திப்பை நடத்தி முடிவெடுக்கப்படும்,’ என, தெரிவிக்கப்பட்டது.
