/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
/
காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
ADDED : மே 04, 2024 12:00 AM

பந்தலுார்;பந்தலுார் அருகே குந்தலாடி சிவன் காலனிக்கு குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பந்தலுார் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குந்தலாடி சிவன் காலனி அமைந்துள்ளது. மிகவும் தாழ்வான பகுதியில் அமைந்துள்ள இங்கு, 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன.
இவர்களுக்கு கடந்த காலங்களில் குடிநீர் வழங்கி வந்த குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டு, தற்போது, 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் குழாய்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதனால், இப்பகுதி மக்களுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்காமல் கடந்த பல ஆண்டுகளாக சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது கோடை சீசன் துவங்கி உள்ளதால், குடிநீர் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டு உள்ளது. இதனால், கூலி வேலைகளுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் பெண்கள், தண்ணீர் தேடி அலையும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை தகவல் தெரிவித்தும், தீர்வு கிடைக்க வில்லை.
தொடர்ந்து, இப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் குந்தலாடி--பந்தலுார் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், பாட்டவயல், கூடலுார், பந்தலுார் சுல்தான் பத்தேரி இடையே வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையில் நிறுத்தப்பட்டது. மேலும், அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டதால் பயணிகள் தமிழக -கேரளா பகுதிகளுக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.
தொடர்ந்து, பந்தலுார் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் வாசுதேவன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அதில், கூடலுார் ஊராட்சி ஒன்றியம் சார்பில் குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடு செய்ய அதிகாரிகள் உறுதி அளித்தனர். தொடர்ந்து, ஒரு மணி நேரம் நடந்த மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.