/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மே தினத்தில் தொழிலாளர்கள் திறந்த நுாலகம்
/
மே தினத்தில் தொழிலாளர்கள் திறந்த நுாலகம்
ADDED : மே 01, 2024 10:52 PM

பந்தலுார் : பந்தலுார் அருகே அவுண்டேல் பகுதியில் தொழிலாளர் தினத்தில் நுாலகம் திறக்கப்பட்டதால் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
பந்தலுார் அருகே தேவர்சோலை பேரூராட்சி மற்றும் நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அவுண்டேல் பகுதி அமைந்துள்ளது. இங்கு தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத இந்த பகுதியில், மாணவர்கள் மற்றும் வாசிக்கும் திறன் கொண்ட மக்கள் பொழுதுபோக்க வழியில்லாத நிலை இருந்தது.
இந்நிலையில், மே தினமான நேற்று, எஸ்டேட் அலுவலர்கள் பயன்படுத்தி வந்த ஓய்வு அறையில், தொழிலாளர்கள் நுாலகம் அமைத்தனர்.
அதன் திறப்பு விழா நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் வரவேற்றார். நுாலகத்தை சங்க செயலாளர் ராஜ்குமார் திறந்து வைத்தார்.
'எஸ்டேட் ஒர்க்கர்ஸ் யூனியன்' தலைவர் அருள்தாஸ் தலைமை வகித்து பேசுகையில், ''இந்த பகுதி முழுமையான எஸ்டேட் தொழிலாளர்களை உள்ளடக்கிய பகுதியாக உள்ளது. இங்கு தொழிலாளர்களின் குழந்தைகள் தற்போது ஓரளவு கல்வியில் மேம்பட்டு வருகின்றனர்.
அவர்கள் போட்டி தேர்வுகளில் சாதிக்க வேண்டுமானால் நுாலகம் அவசியம் தேவையாக உள்ளது. அதனால், தற்போது தொழிலாளர்கள் இணைந்து இங்கு நுாலகத்தை துவங்கி உள்ளனர். இப்பகுதியில் உள்ள தன்னார்வலர்கள் புத்தகங்களை வழங்கி உதவினால் பயனாக இருக்கும்,'' என்றார்.
தொடர்ந்து, பெண்களுக்கான கயிறு இழுத்தல், லெமன் ஸ்பூன் போட்டிகள், ஆண்களுக்கான கயிறு இழுத்தல், குழந்தைகளுக்கான ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்டேட் கள அலுவலர்கள் ரவிச்சந்திரன், பாலமுருகன், தி.மு.க. நிர்வாகி ஞானசேகர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கான, ஏற்பாடுகளை நிர்வாகிகள் ஏசுதாஸ், மணிராஜ், மோகன்தாஸ், பாபு, ஜெகதீஷ் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.

