UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 07:36 PM

பாலக்காடு: பாலக்காடு அருகே, மூன்று நாட்களாகக் காணாமல் போயிருந்த நபர், அப்பகுதியில் உள்ள கைப்பிடிச் சுவர் இல்லாத கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
பாலக்காடு மாவட்டம், கயறாடி கைதச்சிறை பகுதியைச் சேர்ந்தவர் ரவி 49. இவரைக் கடந்த மூன்று நாட்களாகக் காணவில்லை எனத் தெரிகிறது.
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் நெம்மாரா போலீசாரிடம் புகார் அளித்திருந்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை, தனியாரின் நிலத்தில் உள்ள பாழும் கிணற்றில் சடலம் மிதப்பதைக்கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக நெம்மாரா போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், ஆலத்தூர் தீயணைப்பு படையினரும், நீண்ட போராட்டத்திற்குப்பிறகு கிணற்றிலிருந்து சடலத்தை மீட்டனர். சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது காணாமல் போன ரவி என்பது உறுதி செய்யப்பட்டது.
உடலை மீட்டுப் பிரேதப்பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
