தீபம் ஏற்றும் விவகாரத்தில் திடீர் பரபரப்பு: ஊட்டி எம்.எல்.ஏ., உட்பட 12 பேர் கைது
தீபம் ஏற்றும் விவகாரத்தில் திடீர் பரபரப்பு: ஊட்டி எம்.எல்.ஏ., உட்பட 12 பேர் கைது
UPDATED : நவ 24, 2026 07:38 PM
ADDED : நவ 24, 2026 07:34 PM

கோத்தகிரி:
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக, பா.ஜ., எம்.எல்.ஏ., அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கார்த்திகை தீபம் நாளில் திருப்பரங்குன்றத்தில், ஒரு நாள் தீபம் ஏற்ற, சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. அதனை, பா.ஜ., உட்பட, இந்து அமைப்புகள் வரவேற்ற நிலையில், மாநில அரசு, மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது. அங்கு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோத்தகிரியில் இருந்து, எம்.எல்.ஏ., போஜராஜன் தலைமையில், கட்சியினர் திருப்பரங்குன்றத்திற்கு புறப்பட்டனர்.
அப்போது, இன்ஸ்பெக்டர் சாஸ்தா உள்ளிட்ட போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, எம்.எல்.ஏ., அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை ஏற்காத கட்சியினர், சாலைக்கு சென்று சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அதில், எம்.எல்.ஏ., போஜராஜன், மாவட்ட தலைவர் தருமன், பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் அன்பரசன், மாவட்ட பொதுச் செயலாளர் குமார் மற்றும் பரமேஸ்வரன் உட்பட, 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
