/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
7 கடைகளுக்கு 'சீல்': நகராட்சி நிர்வாகம் அதிரடி
/
7 கடைகளுக்கு 'சீல்': நகராட்சி நிர்வாகம் அதிரடி
ADDED : அக் 29, 2025 11:38 PM

கூடலூர்: கூடலூர் அருகே செக் ஷன் 17 நிலத்தில், தடையை மீறி கட்டப்பட்ட, 7 கடைகளுக்கு நகராட்சி ஊழியர்கள் 'சீல்' வைத்தனர்.
கூடலூரில், செக் ஷன், 17 அரசு நிலங்களில், புதிய கட்டடங்கள் கட்டவும், அரசு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில பகுதிகளில், அனுமதியின்றி புதிய கட்டடங்கள் கட்டுவதாக வருவாய் துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.
புகாரின் அடிப்படையில், கோழிக்கோடு சாலை நந்தட்டி, செம்பாலா பகுதியில் செக் ஷன், 17 அரசு நிலத்தில் அனுமதி இன்றி புதிய கட்டடங்கள் கட்டுவது தெரியவந்தது.
இக்கட்டட பணிகளை உடனடியாக நிறுத்தும்படி கூடலூர் வருவாய் துறை சார்பில் சமீபத்தில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால், அனுமதி இன்றி புதிதாக கட்டடம் கட்டுபவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், கலெக்டர் உத்தரவுபடி கூடலூர் நகராட்சி நகரமைப்பு திட்ட அலுவலர் பிரவீன் மற்றும் ஊழியர்கள் நேற்று முன்தினம், மாலை செம்பாலா பகுதியில் ஆய்வு செய்து, அனுமதி இன்றி கட்டப்பட்ட, ஏழு கடைகளுக்கு 'சீல்' வைத்தனர்.
இதனிடையே, 'சீல்' வைக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் பாரபட்சம் காட்டியதாக புகார் எழுந்துள்ளது.
கூடலூர் நகராட்சி கமிஷனர் சுவீதாஸ்ரீ கூறுகையில், 'இதில் எந்த பாரபட்சமும் காட்டப்படவில்லை. புகார் தொடர்பாக ஆய்வு செய்யப்படும்.' என்றார்.

