/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடிநீர் ஆதாரங்களில் 90 சதவீதம் தண்ணீர் இருப்பு கோடையை சமாளிக்கலாம்!
/
குடிநீர் ஆதாரங்களில் 90 சதவீதம் தண்ணீர் இருப்பு கோடையை சமாளிக்கலாம்!
குடிநீர் ஆதாரங்களில் 90 சதவீதம் தண்ணீர் இருப்பு கோடையை சமாளிக்கலாம்!
குடிநீர் ஆதாரங்களில் 90 சதவீதம் தண்ணீர் இருப்பு கோடையை சமாளிக்கலாம்!
ADDED : அக் 21, 2024 04:36 AM
ஊட்டி : 'ஊட்டி நகராட்சி குடிநீர் ஆதாரங்களில், 90 சதவீதம் அளவுக்கு தண்ணீர் இருப்பில் உள்ளதால், கோடையை சமாளிக்க முடியும்,' என, நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. 1.30 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். வார்டு பகுதிகளுக்கு, 'பார்சன்ஸ்வேலி, மார்லிமந்து, டைகர்ஹில், கோரிசோலை, அப்பர் தொட்டபெட்டா, அப்பர்கோடப்பமந்து, லோயர் தொட்டபெட்டா, ஓல்டு ஊட்டி,' உள்ளிட்ட நீராதாரங்களிலிருந்து தண்ணீர் கொண்டுவரப்பட்டு வினியோகிக்கப்படுகிறது. அதில், 18 வார்டுகளுக்கு பார்சன்ஸ்வேலி குடிநீர் முக்கிய ஆதாரமாக உள்ளது.
நடப்பாண்டில் கோடை மழை வெகுவாக குறைந்தாலும், தென் மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்தது.
மாவட்டத்தில், '35 கிராம ஊராட்சி, 11 பேரூராட்சி, 4 நகராட்சி மற்றும் மின்வாரியத்திற்கு சொந்தமான, 13 அணை, 30 தடுப்பணை,' என, பெரும்பாலான நீராதாரங்களில், 90 சதவீதம் அளவுக்கு தண்ணீர் நிரம்பியது.
தற்போது, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பே, அவ்வப்போது மாவட்டத்தில் ஆங்காங்கே கன மழை பெய்துள்ளது. இந்த மழையால் கிராம ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி என, உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள முக்கிய நீராதாரங்களில் தேவைக்கேற்ப குடிநீர் உள்ளது.
கோடையை சமாளிக்கலாம்
ஊட்டி சர்வதேச சுற்றுலா தலமாக இருப்பதால் ஆண்டுக்கு சராசரியாக, 35 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். ஓட்டல், லாட்ஜ், காட்டேஜ் என, தங்கும் விடுதிகளில் தேவைக்கேற்ப தண்ணீர் வசதி இருந்தால் மட்டுமே சுற்றுலா பயணியரை தங்க வைக்க முடியும்.
தற்போது, ஊட்டி நகராட்சியை பொறுத்த வரை, பார்சன்ஸ்வேலி, 58 அடிக்கு 45; மார்லிமந்து, 23 அடிக்கு 18; டைகர் ஹில், 39 அடிக்கு 32; கோரிசோலை, 35 அடிக்கு 24; அப்பர் தொட்டபெட்டா 31 அடிக்கு 25 அடிவரை தண்ணீர் உள்ளது.
மேலும், அப்பர் கோடப்பமந்து, 12 அடிக்கு 12; லோயர் தொட்ட, 14 அடிக்கு 14; ஓல்டு ஊட்டி, 6 அடிக்கு 6; கிளன்ராக், 7 அடிக்கு 7,' அடி வரை முழு கொள்ளளவில் தண்ணீர் இருப்பில் உள்ளது.
நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா கூறுகையில், '' ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகளுக்கு பார்சன்ஸ்வேலி, மார்லிமந்து, டைகர்ஹில் என, 8 குடிநீர் ஆதாரங்களிலிருந்து கொண்டுவரப்படும் தண்ணீர் வார்டுகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.
எதிர்பார்த்த அளவு மழை பெய்ததால், 90 சதவீதம் அளவுக்கு நீராதாரங்களில் தண்ணீர் இருப்பில் உள்ளது. அதில், அப்பர் கோடப்பமந்து, லோயர் தொட்டபெட்டா, ஓல்டு ஊட்டி, கிளன்ராக் உள்ளிட்ட தடுப்பணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அடுத்தாண்டு மே மாதம் வரை வார்டுகளுக்கு தடையின்றி குடிநீர் வினியோகிக்க முடியும்,'' என்றார்.

