/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இரு மாநில எல்லையோர வனப்பகுதியில் முகாமிடும் வேட்டை கும்பல்! வாகனங்களில் இடத்துக்கு ஏற்ப மாற்றப்படும் 'நம்பர் பிளேட்'
/
இரு மாநில எல்லையோர வனப்பகுதியில் முகாமிடும் வேட்டை கும்பல்! வாகனங்களில் இடத்துக்கு ஏற்ப மாற்றப்படும் 'நம்பர் பிளேட்'
இரு மாநில எல்லையோர வனப்பகுதியில் முகாமிடும் வேட்டை கும்பல்! வாகனங்களில் இடத்துக்கு ஏற்ப மாற்றப்படும் 'நம்பர் பிளேட்'
இரு மாநில எல்லையோர வனப்பகுதியில் முகாமிடும் வேட்டை கும்பல்! வாகனங்களில் இடத்துக்கு ஏற்ப மாற்றப்படும் 'நம்பர் பிளேட்'
ADDED : மார் 05, 2025 10:04 PM

பந்தலுார்: பந்தலுார் அருகே நாடுகாணி பகுதியில் கைது செய்யப்பட்ட வேட்டை கும்பல், தமிழகம் மற்றும் கேரளாவில் தொடர் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக, வனத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த, 27ஆம் தேதி இரவு கேரளாவில் இருந்து, தமிழகம் நோக்கி வந்த ஒரு கார், கேரளா மாநில சோதனை சாவடியில் நிற்காமல் வந்துள்ளது. இதுகுறித்து, பந்தலுார் அருகே நாடுகாணி சோதனை சாவடி, காவலர்களுக்கு கேரள வனத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கீழ்நாடுகாணி பகுதியில், வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு உத்தரவுப்படி, தேவாலா வனச்சரகர் சஞ்சீவி தலைமையிலான வனத்துறையினர் வாகனங்களை சோதனை செய்தனர்.
அப்போது, கேரள பதிவெண் கொண்ட காரில், வேட்டைக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தது தெரிய வந்தது. அதில் இருந்து கும்பலை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள், தமிழகம் மற்றும் கேரளா பகுதிகளில் தொடர் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்தது.
காரில் தமிழக நம்பர் பிளேட்
மேலும்,கேரளா மாநில பதிவு எண் கொண்ட காரில், தமிழகத்தின் நம்பர் பிளேட்டும் இருந்துள்ளது. இவர்கள் வால்பாறை மற்றும் கேரளாவின் வனப்பகுதிகளில் தொடர்ந்து வனவிலங்குகளை வேட்டையாடி, விற்பனை செய்வதை தொழிலாக கொண்டுள்ளதும் தெரிய வந்தது.
இதை தொடர்ந்து, கேரள மாநிலம் வழிகடவு பகுதியை சேர்ந்த ரெஜி,46, ரஹமத் அலி,37, ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். கார், துப்பாக்கி தோட்டா மற்றம் பிற பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள காரின் உரிமையாளர் அமீன், வேட்டை கும்பலை சேர்ந்த சுனீர் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
மாநில எல்லையில் வேட்டை
கூடலுார் வன உயிரின மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் பொது செயலாளர் சிவசுப்ரமணியம் கூறுகையில்,''கேரள மாநிலம் வழிக்கடவு பகுதி, நிலம்பூர் மற்றும் தமிழகத்தின் நாடுகாணி வனப்பகுதிகளை உள்ளடக்கிய பகுதியாக உள்ளது. இப்பகுதி அதிக அளவில் காட்டெருமை, மான், புலி, சிறுத்தை, யானை வந்து செல்லும் இடமாக உள்ளது. இதனால், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் இந்த வேட்டை கும்பல், வனத்தை ஒட்டிய சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு, இரவு நேரத்தில் வன விலங்குகளை வேட்டையாடி அவற்றை இறைச்சி துண்டாக மாற்றி, கேரளாவிற்கு எடுத்து சென்று அங்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து லாபம் பார்த்து வருகின்றனர். தொடரும் வனவிலங்கு வேட்டையை கட்டுப்படுத்தும் வகையில், பகல் மற்றும் இரவு நேரங்களில் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
தேவாலா ரேஞ்சர் சஞ்சீவி கூறுகையில்,'' நீலகிரி, கேரள எல்லையில் உள்ள வனப்பகுதிகளில் காட்டெருமைகளை வேட்டையாடும், இரு முக்கிய கும்பலை ஏற்கனவே கைது செய்துள்ளோம். அவர்களிடம் நடந்த விசாரணையின் அடிப்படையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம். இந்த கும்பல்களுக்கு, தமிழகம்; கேரளாவில் உள்ள தொடர்புகளை அறிந்து, அவர்களிடம் விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.