ADDED : ஏப் 11, 2025 10:03 PM

குன்னுார், ; குன்னுார் மலை பாதையில் நடந்த, தவக்கால பவனியில், இயேசுவை சிலுவையில் அறையும் போது ஏற்பட்ட பாடுகள் தத்ரூபமாக விளக்கப்பட்டது.
குன்னுார் பகுதிகளில் மலையாள கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் அதிகம் உள்ளனர். கிறிஸ்துவ மக்களின், 41வது நோன்பு நாளை நினைவு கூறும் வகையில், பர்லியார், வேளாங்கண்ணி ஆலயத்தில், இருந்து, குன்னுார் செபஸ்டியார் தேவாலயம் வரையில், 18 கி.மீ., துாரம் தவக்கால பரிகார பவனி நேற்று நடந்தது. குன்னுார் --மேட்டுப்பாளையம் சாலை வனப்பகுதிகள் அருகே, 14 இடங்களில் பரிகார ஜெபங்கள், அர்ப்பணிப்பு செய்யப்பட்டது.
அதில், 'இயேசு கிறிஸ்து, கன்னி மரியாள், பிலாத்து படைவீரர்கள்' ஆகியோர் போல வேடம் அணிந்து ஊர்வலத்தில் பங்கு மக்கள் பங்கேற்று, இயேசுவை சிலுவையில் அறையும் போது ஏற்பட்ட பாடுகளை தத்ரூபமாக விளக்கி, பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, புனித செபஸ்தியார் ஆலயத்தில் திருப்பலியுடன் பவனி நிறைவு பெற்றது.