/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மழையால் நிரம்பிய குளம், குட்டைகளால் படிமட்ட விவசாயம்! மலையில் கடைபோக சாகுபடிக்கு தடையில்லை
/
மழையால் நிரம்பிய குளம், குட்டைகளால் படிமட்ட விவசாயம்! மலையில் கடைபோக சாகுபடிக்கு தடையில்லை
மழையால் நிரம்பிய குளம், குட்டைகளால் படிமட்ட விவசாயம்! மலையில் கடைபோக சாகுபடிக்கு தடையில்லை
மழையால் நிரம்பிய குளம், குட்டைகளால் படிமட்ட விவசாயம்! மலையில் கடைபோக சாகுபடிக்கு தடையில்லை
ADDED : அக் 10, 2025 10:04 PM

ஊட்டி: நீலகிரியில் பல மாதங்களாக தொடரும் மழையால், குளம், குட்டைகளில் நீர் ததும்புவதால், கடைபோக படிமட்ட சாகுபடியில் மலை காய்கறி விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்; மண்ணரிப்பை தடுக்க, படிமட்ட விவசாயத்தில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரியில், 60 ஆயிரம் ஏக்கரில் தேயிலை சாகுபடி, 20 ஆயிரம் ஏக்கரில் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இம்மாவட்டத்தை பொறுத்தவரை அந்தந்த பகுதிகளின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன.
'கார் போகம், கடைபோகம், நீர் போகம்,' என, மூன்று பருவங்களில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தோட்டக்கலை துறையினர் மலை காய்கறி விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, பல்வேறு மானிய திட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
தடையின்றி தண்ணீர் சேமிப்பு
நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்ததால், அணைகள்,குளங்கள், குட்டைகள் அனைத்தும் நிரம்பி காணப்படுகிறது. தற்போது, வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மழை காலத்தில் சேகரிக்கப்படும் தண்ணீர்,வறட்சி காலங்களில் விவசாய பணிக்கு பயன்படுத்தப்படுகிறது. தேவைக்கு ஏற்ப தண்ணீர் உள்ளதால், தற்போது விவசாயிகள் கார்போக சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயி ரங்கன் கூறுகையில்,''நடப்பாண்டில் தென்மேற்கு பருவ மழை எதிர்பார்த்த அளவை விட அதிகளவில் பெய்துள்ளது. இதனால், மலை காய்கறி தோட்டங்களில் காய்கறி விளைச்சலுக்கு ஏற்பட்ட சீதோஷ்ண நிலை நிலவுகிறது. இதனால், ஆண்டு இறுதியில் மேற்கொள்ளும் கார்போக விவசாயத்தில், கேரட், பூண்டு, கோஸ், உருளை கிழக்கை அதிகளவில் பயிரிட்டுள்ளோம். ஊட்டி, முத்தோரை, பாலாடா, எமரால்டு, ஆடாசோலை, குருத்துகுளி, குழிசோலை, கேத்தி, சாந்துார், அவலாஞ்சி உட்பட பல்வேறு பகுதிகளிலும், 15 ஆயிரம் ஏக்கரில் நடக்கும் இதன் உற்பத்தி நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்,''என்றார்.
தோட்ட கலைத்துறை இணை இயக்குனர் சிபிலாமேரி கூறுகையில்,''நடப்பாண்டில் பெய்த பருவ மழையின் காரணமாக, மலை காய்கறி தோட்டங்களுக்கு ஏற்ற சூழல் உள்ளது. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் தேவையான தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது. இதனால், கார்போக சாகுபடி பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு மானிய திட்டங்களையும் தோட்டக்கலை துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. அதனை பயன்படுத்தி இந்த பருவத்தில் விவசாயிகள் தரமான மலை காய்கறிகளை விளைவித்து பயன்பெற வேண்டும்,'' என்றார்.