/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பல்லாங்குழி சாலைகளில் திகில் பயணம்; மழைக்காலங்களில் கரணம் தப்பினால் மரணம்
/
பல்லாங்குழி சாலைகளில் திகில் பயணம்; மழைக்காலங்களில் கரணம் தப்பினால் மரணம்
பல்லாங்குழி சாலைகளில் திகில் பயணம்; மழைக்காலங்களில் கரணம் தப்பினால் மரணம்
பல்லாங்குழி சாலைகளில் திகில் பயணம்; மழைக்காலங்களில் கரணம் தப்பினால் மரணம்
ADDED : மே 07, 2025 11:46 PM

நீலகிரி மலை மாவட்டத்தில், ஒவ்வொரு ஐந்தாண்டு இடைவெளியில், பர்லியார் முதல் கக்கனல்லா வரையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மாநில நெடுஞ்சாலை துறையின் கீழ் வரும் பல சாலைகள் பராமரிக்கப்பட்டு வந்தாலும், இங்கு தொடரும் மழை காரணமாக, சாலைகள் விரைவில் சேதமடைந்து வருகின்றன.
மறுபுறம், இம்மாவட்டத்தின் பெருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தேயிலை மற்றும் காய்கறி தோட்டம் அதிகம் உள்ள கிராமப்புறங்களின் சாலைகளில், பெரும்பாலானவை வாகனங்கள் செல்வதற்கு தகுதியற்றவைகளாக மாறி உள்ளன.
இதனால், சிறுவிவசாயிகள், தங்களின் விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்வதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.
கடந்த, 2014ம் ஆண்டு முதல், 'கிராம சதக் யோஜ்னா' திட்டத்தின் கீழ், மலை கிராம சாலைகள் மேம்பாட்டுக்கு, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. எனினும், பழங்குடியினர், சிறு விவசாயிகள், தோட்ட தொழிலாளர்கள் வாழும் பல கிராம சாலைகள் சீரமைக்கப்படாமல் மிகவும் மோசமாக காணப்படுகின்றன.
'பழங்குடியின கிராமங்களுக்கு செல்லும் சாலைகளை சீரமைக்க எந்த தடையும் விதிக்க கூடாது,' என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ள நிலையிலும், இதுவரை சாலையை பார்க்காத பழங்குடியின கிராமங்கள் தற்போதும் உள்ளன.
சீரமைக்காத செங்குத்தான சாலைகள்
மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலை துறையின் கீழ், 'முக்கிய சாலைகள்; இதர மாவட்ட சாலைகள்,' என்ற பிரிவுகளின் கீழ் சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதில், முக்கிய சாலைகள், 905 உள்ளன.
அதில், ஊட்டி, குந்தா, குன்னுார், பந்தலுார், கூடலுார், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் பெரும்பாலான சாலைகள் கிராமப்புற சாலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் அதிக அளவில் வாகன போக்குவரத்து உள்ள நிலையில், இத்தகைய சாலைகளை குறிப்பிட்ட காலத்துக்குள் சீரமைப்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்துவதில்லை.
இங்கு பெரும்பாலான கிராமப்பகுதிகளில், செங்குத்தான மற்றும் கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட சாலைகள் பல உள்ள நிலையில், இவற்றை முறையாக பராமரிக்காததால், மக்கள் நாள்தோறும் அவதிப்படுகின்றனர்.
குறிப்பாக, குன்னுார், கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில் வனப்பகுதி சாலைகளை கடந்து பல்வேறு கிராமங்களுக்கும் செல்ல வேண்டிய சூழலில், வன சட்டங்களை மேற்கோள்காட்டி, சாலைகளை சீரமைக்க வனத்துறை அனுமதி மறுக்கிறது.
இதனால், பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலைகளில் கற்கள் பெயர்ந்து குழிகளாக மாறி, வாகனங்களும் சென்று வர முடியாத சூழல் உள்ளது. பல கிராமங்களுக்கு மக்கள், இணைப்பு சாலைகளில் இருந்து, ஐந்து முதல் ஏழு கி.மீ., துாரம் வரை நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
இரு மாநில இணைப்பு சாலைகளும் மோசம்
கூடலுார் -மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஊசிமலை, -தொரப்பள்ளி இடைப்பட்ட, 16 கி.மீ., துாரமுள்ள சாலை மூன்று ஆண்டுகளாக சேதம் அடைந்து வருகிறது. இதனை நிரந்தரமாக சீரமைக்க எந்த நடவடிக்கையும் இல்லை.
அதே போன்று, தமிழகம்- கேரளாவை இணைக்கும் நாடுகாணி முதல் மாநில எல்லையான கீழ்நாடுகாணி வரையிலான, 6 கி.மீ., தூரம் உள்ள சாலை வாகன போக்குவரத்துக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
இவ்வழியாக நீலகிரிக்குள் நுழையும் வாகனங்களுக்கு, நாடுகாணியில் நுழைவு வரி வசூல் மையத்தில், நுழைவு கட்டணம் வசூல் செய்து வருகின்றனர். எனினும், சாலையை நிரந்தரமாக சீரமைக்க எந்த நடவடிக்கையும் இல்லை.
கூடலுார் தேவர்சோலை அருகே, புலம்பட்டி மட்டம் இடையேயான சாலை, மிக மோசமான நிலையில் சேதம் அடைந்துள்ளது. இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை இல்லாததால், பருவமழையின் போது இவ்வழியாக இயக்கப்படும் அரசு பஸ் நிறுத்தப்படும் ஆபத்து உள்ளது. இது போன்ற பல கிராம சாலைகள் சேதமடைந்து சீரமைக்கப்படாமல் உள்ளது.
இதேபோல, கேத்தி முட்டிநாடு அருகே கோலனிமட்டம் சாலை, கோடை காலத்திலும் சேறு நிறைந்து வயல்வெளி போன்று உள்ளது. குன்னுார் ஜெகதளா பகுதியில் பல ஆண்டுகளாக சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும், கோத்தகிரி தாலுகா அலுவலக சாலை, பில்லி கொம்பை சாலை, ஒன்னதலை கோவில் மேடு இணைப்பு சாலைகள் மிகவும் சேதமடைந்தும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை.
தேர்தல் சமயத்தில் வரும் அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர். ஆட்சியில் அமர்ந்தவுடன் காணாமல் போய்விடுகின்றனர் சாலைகளை போலவே!
-நிருபர் குழு-